கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடையின் போது,  13.33 லட்சம் வங்கிக்கணக்குகளில் ரூ. 2.89 லட்சம் கோடி டெபாசிட் செய்த 9.72 லட்சம் பேரை வருமானவரித்துறை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது.

ரூபாய் நோட்டு தடையின் போது வங்கிகள், தபால்நிலையங்களில் டெபாசிட்செய்யப்பட்ட ரூ.1000, ரூ.500 நோட்டுகள் குறித்த அறிக்கையை நேற்றுமுன்தினம்ரிசர்வ் வங்கி வௌியிட்டது. அதில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.15.50 லட்சம் கோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் 98.6 சதவீதம் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன. மீதம் 1.4 சதவீத நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு வரவில்லை. அதாவது ரூ.16 ஆயிரம் கோடி மட்டுமே வரவில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம், கருப்பு பணம் என்பது வெறும் ரூ.16 ஆயிரம் கோடி மட்டும்தான் என்பது தெரியவந்தது.

இந்த அறிக்கையையடுத்து, ஏராளமானோர் தங்களிடம் இருக்கும் கணக்கில் வராத பணத்தை டெபாசிட் செய்ய, ரூபாய் நோட்டு தடையை பயன்படுத்திக் கொண்டனர், அடமானம் வைத்த நகையைத் திருப்பியது, வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியது என பல வகைகளில் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர்.  அவர்கள் அனைவரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர வருமானவரித் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, 13.33 லட்சம் வங்கிக்கணக்குகளில் ரூ.2.89 லட்சம் கோடி டெபாசிட் செய்த 9.72 லட்சம் பேரை கணக்கெடுத்துள்ளது வருமானவரித்துறை. இவர்கள் அனைவரிடமும் மண்டல வாரியாக இனிமேல் நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது.