ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், சந்தேகத்துக்கு உரிய வகையில், வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்த 18 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இந்த 18 லட்சம் பேரும் தங்களின் வங்கிக்கணக்கில் ரூ. 3 முதல் 5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள். இவர்களுக்கு மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். மூலம் செய்தி அனுப்பட்டு, விளக்கம் கேட்கப்படும்.

இவர்கள் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது, அப்படி தவறும் பட்சத்தில் நடவடிக்கை தொடங்கும்.
10 நாளில்பதில்
மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹாஸ்முக் ஆதியா இது குறித்து கூறுகையில், “ சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் டெபாசிட்செய்கிறவர்களிடம் மின்னணு முறையில் விளக்கம் கேட்கப்படுகிறது. அதற்காக சுவாச் தன் அபியான் என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெபாசிட் செய்தவர்களிடம்ம் பதில்கள் பெறப்படும். அவர்களிடம் பெறப்படுகிற முதல் கட்ட பதில்கள் ஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் நோட்டீசுக்கு 10 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை தொடங்கும் '' என்று தெரிவித்தார்.

18 லட்சம்
மத்திய நேரடி வரிகள் வாரிய சேர்மன் சுஷில் சந்திரா கூறுகையில், “ முதலில் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக டெபாசிட்செய்தவர்கள், சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ரூ.3 லட்சம் தொடங்கி ரூ.5 லட்சம் வரையில் டெபாசிட் செய்தவர்கள் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். முதலில் 18 லட்சம் பேரின் விவரங்கள், மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான, வருமான வரித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவர்கள் அனைவரும் தங்கள் வருமானத்துக்கான ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும்.

ஒரு கோடிக்கும் அதிகமானோர் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்துள்ளனர். இதில் 70 லட்சம் பேரின் பான்கார்டு எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகவல்களை, அவர்களின் வருமான விவரங்கள், விற்றுமுதல் , வருமான வரித்துறையின் தகவல் வங்கியிடம் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்திருக்கிறோம். வரி செலுத்துகிறவர்களுக்கு எந்த விதமான தொல்லையும் ஏற்படாமல் இருப்பதற்காகவே இந்த திட்டத்தை அமல்படுத்துகிறோம். பொதுமக்கள் அலுவலகத்துக்கு வர தேவையில்லை. இணையதளம் வழியாகவே சோதித்து பார்க்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
