ஆவடி பகுதியில் உள்ள செல்போன் கடையின் சுவரில், நள்ளிரவில் துளைப்போட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த ரூ.10 லட்சம் செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.

அம்பத்தூரை சேர்ந்தவர் தனசேகர். சிடிஎச் சாலையில், ஆவடி பஸ் நிலையம் எதிரே செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். இங்கு ஊழியர்கள் 3 பேர் வேலை பார்க்கின்றனர். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் தனசேகர் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டி கொண்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க தனசேகர் சென்றார். கடையை திறந்து உள்ளே சென்றபோது, அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ஷோக்கேசில் வைக்கப்பட்டு இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

நள்ளிரவில், கடையின் பின் பக்க சுவரை துளைப்போட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கடையில் இருந்த செல்போன்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தகவலறிந்து ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆவடி சிடிஎச் சாலையில் ஏராளமான நகைக்கடை, துணிக்கடை, செல்போன் கடை, ஓட்டல் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. இந்த பகுதியில் அடிக்கடி கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.