இரவில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் போர் விமானத்தை தரையிறக்கி இந்திய கடற்படை சாதனை
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் MiG-29K போர் விமானத்தை முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கி இந்திய கடற்படை மற்றொரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
விமானத்தைத் தரையிறக்கும் வசதி கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் MiG-29K போர் விமானத்தை முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்திய கடற்படை மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இது கடற்படையின் சுயசார்பு நிலையை நோக்கிய நடகர்வைக் குறிக்கிறது என இந்திய கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சவாலான இரவு தரையிறக்க சோதனையில் வெற்றி பெற்றிருப்பது ஐஎன்ஸ் விக்ராந்த் குழுவினர் மற்றும் கடற்படை விமானிகளின் உறுதி, திறமை மற்றும் தொழில் திறன் ஆகியவற்றை நிரூபிக்கிறது என இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியுள்ளார்.
இந்த சாதனைக்கு முன்னதாக, கடற்படையின் தேஜாஸ் விமானம் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கப்பட்டது.
ஐஎன்எஸ் விக்ராந்த், 262 மீட்டர் நீளம் மற்றும் 62 மீட்டர் அகலம், 59 மீட்டர் உயரம், 2,300 க்கும் மேற்பட்ட அறைகளை உள்ளடங்கியது. இந்த அறைகள் சுமார் 1,700 பணியாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதில் பெண் அதிகாரிகளுக்கான பிரத்யேக அறைகளும் அடங்கும். ஐஎன்எஸ் விக்ராந்த்தின் அதிகபட்ச வேகம் சுமார் 28 நாட்ஸ். பயண வேகம் 18 நாட்ஸ். இது சுமார் 7,500 கடல் மைல் தூரத்தை கடக்க உதவுகிறது.
ஐஎன்எஸ் விக்ராந்தின் கட்டுமானப் பணிகள் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் அதனை கடற்படை பயன்பாட்டுக்குக் அர்ப்பணித்தார்.
ஒரே ஒரு ஒயின் பாட்டிலை ஏலத்தில் விற்று கோடீஸ்வரரான மார்க் பால்சன்!