ஒரே ஒரு ஒயின் பாட்டிலை ஏலத்தில் விற்று கோடீஸ்வரரான மார்க் பால்சன்!
மார்க் பால்சன் 1970ஆம் ஆண்டு வாங்கிய இந்த வகை ஒயின் மிகவும் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் 1,300 பாட்டில்கள் மட்டுமே உள்ளன.
மதுபானம் எவ்வளவுக்கு எவ்வளவு பழையதாக உள்ளதோ அந்த அளவுக்கு அதன் சுவை மற்றும் போதையுதம் அதிகமாக இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. பழைய மதுபானத்திற்கு இருக்கும் இந்த மவுசு காரணமாக பலர் பழைய மது பாட்டில்களைத் தேடித் தேடி அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். அந்த வகையில் ஒரு ஒரு நபர் வைத்திருந்த பழைய மதுபாட்டில் அவரை கோடீஸ்வரனாக மாற்றியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் மார்க் பால்சன், 1970களில் டொமைன் டி லா ரோமானீ-கான்டி லா டாச்சே என்ற பிரத்யேகமான மது பாட்டிலை வாங்கினார். குறிப்பிடத்தக்க வகையில், இந்த விலைமதிப்பற்ற மதுவை பல ஆண்டுகளாக அருந்தாமல் பத்திரமாக வைத்திருந்தார். ஒரு அட்டைப் பெட்டிக்குள் வைத்து பூமிக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டார்.
வாங்கிய நேரத்தில், பால்சன் இந்த மது பாட்டிலுக்கு 250 டாலர் கொடுத்திருக்கிறார். இன்றைய மதிப்பில் தோராயமாக ரூ.20,000க்கு சமம். இப்போது பாட்டிலின் சந்தை மதிப்பு சுமார் 1,889 டாலர். இருப்பினும், அதன் பழமை காரணமாக, ஏலத்தில் 1,06,50 டாலருக்கு விலை போயிருக்கிறது.
Domaine de la Romanée-Conti ஒயின் ஒயின் உலகில் இணையற்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதை விற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஏற்ற ஏல நிறுவனமான போன்ஹாம்ஸ் ஸ்கின்னர், 50 ஆண்டுகளாக பாதுகாத்து வைக்கப்பட்ட இந்த பாட்டில், ஆரம்பத்தில் 50,000 முதல் 80,000 டாலர் வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புகளை விஞ்சி இறுதியில் 1,06,250 டாலருக்கு விற்கப்பட்டது" எனவும் சொல்கிறார்.
கடற்படையில் பணிபுரிந்தவரும் ஓவியருமான மார்க் பால்சன் அசாதாரண, தனித்துவமான ஒயின்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஏலமிடப்பட்ட குறிப்பிட்ட பாட்டில் டபுள் மேக்னம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வழக்கமான ஒயின் பாட்டில்களைவிட நான்கு மடங்கு பெரியது.
Domaine de la Romanée-Conti நிறுவனம் ஆண்டுதோறும் பல வகைகளில் சராசரியாக 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் மது பாட்டில்களை தயாரிக்கிறது. அதிக உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருந்தாலும், பழங்கால முறையைப் பின்பற்றி மது வகைகளைத் தயாரிப்பதால் இந்நிறுவனத்தின் மது வகைகள் அபூர்வமானவையாக உள்ளன.