ஜம்மு-காஷ்மீர் உட்பட நாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது.

நாட்டில் அமைதியை சீர்குலைக்‍கும் வகையில் முக்‍கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்‍குதல் நடத்தலாம் என்பதால், பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இக்‍கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. Manohar Parrikar, தேசிய பாதுகாப்பு ஆலோசாகர் திரு. Ajit Doval, மற்றும் ரா அமைப்பின் தலைவர், பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் Pampore-ல் தீவிரவாதிகளுக்‍கும், பாதுகாப்புப் படையினருக்‍கும் இடையே 56 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்‍கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்‍கம் அளித்தனர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி நிலவரம் குறித்தும், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நாட்டின் ஒட்டுமொத்த நிலவரம் மற்றும் பண்டிகை காலத்தையொட்டி அமைதியை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்‍கைகள் குறித்தும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்‍கம் அளித்தனர்.