கர்நாடகாவின் ஹவேரியில் உள்ள பட்டாசு கிடங்கில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள அலடகட்டிகிராமில் உள்ள பட்டாசு கிடங்கில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும்இருவர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது, அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலியானவர்கள் காடேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தியமப்பா ஓலேகர் (45), ரமேஷ் பார்கி (23), சிவலிங்க அக்கி (25) என அடையாளம் காணப்பட்டனர்.

எரிந்த நிலையில் இருக்கும் அவர்களின் உடல்கள் முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்பட்டன. உயிரிழந்தவர்களைத் தவிர, வாசிம் ஷாபி அகமது மற்றும் ஷெரு கட்டிமணி ஆகிய இருவர் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிடங்கிற்குள் சிக்கியுள்ள மற்றவர்களை தேடும் பணியை, தீயணைப்பு படையினரும் காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

வீரேஷ் சட்டெனஹள்ளி என்பவருக்கு சொந்தமான பூமிகா பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கிடங்கில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக ஏராளமான பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்தன.

டெல்லியில் பயங்கரம்.. அமேசான் மேனேஜர் 5 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொலை.!

கிடங்கின் ஷட்டர் மற்றும் கேட்களை வெல்டிங் செய்யும் போது, உள்ளே வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. காலை 11 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் சிக்கியவர்களை மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

எனினும் உள்ளே வெடிப்பொருட்கள் இருந்ததால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்புப் படை மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் 16 மணி நேரம் போராடி இன்று அதிகாலையில் தீயை அணைத்தனர்.இதைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் இருவர் கிடங்கில் தங்கியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் சித்தராமையாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர், மாவட்டப் பொறுப்பாளர் சிவராஜா தங்கடகியை நேரில் பார்வையிட உத்தரவிட்டார். மேலும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் அவர் ஆணையிட்டார்.

கர்நாடக சட்டப்பேரவையின் துணைத் தலைவரும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினருமான ருத்ரப்பா லமானி நிலைமையை ஆய்வு செய்ய இடத்தை பார்வையிட்டார். சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்தார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு கிடங்கு உரிமையாளர் குமார சத்தேனஹள்ளியை போலீசார் கைது செய்தனர்.