GST tax reduced for agarbhatis insulin pickles
வழிபாட்டுக்கு பயன்படும் ஊதுபத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின் மருந்து, சமையலில் பயன்படும் கடுகு சாஸ், ஊறுகாய், ரூ.100க்கும் குறைவான சினிமா டிக்கெட் உள்ளிட்ட 63 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது.
ஜூலை முதல் அமல்
கடந்த 1947ம் ஆண்டுக்கு பின் நாட்டில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாக ஜி.எஸ்.டி.வரி அமைந்துள்ளது. மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு நாடுமுழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
4 வகை வரி
இந்த ஜி.எஸ்.டி. வரியில் பொருட்கள் ,சேவைகளுக்கு 5, 12, 18, 28 என 4 வீதங்களில் வரிகள் விதிக்கப்பட உள்ளன. எந்தெந்த பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி விதிப்பது, ஜி.எஸ்.டி. விதிமுறைகள், சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது.
1200 பொருட்கள்
இந்த. ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதலைவராகவும், மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இதுவரை ஜி.எஸ்.டி. கவுன்சில் 15 முறை கூடி, 1200 பொருட்கள், 500 சேவைகளுக்கான வரி

விகிதங்களை நிர்ணயம் செய்தது.
கோரிக்கை
இதற்கிடையே, பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி அதிகமாக இருப்பதாகக்கூறி, அதைக் குறைக்க பல மாநில அரசுகளின் சார்பில் அதன் நிதிஅமைச்சர்கள் மத்திய அமைச்சர் ஜெட்லியை வலியுறுத்தினர். இதன்படி, 133 பொருட்களின் வரியை மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு அதிகாரிகள் கொண்ட குழுஅமைக்கப்பட்டது.
16-வதுகூட்டம்
அந்த குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 16-வது கூட்டம் நேற்று டெல்லியில் கூடியது. இதில் 66 பொருட்களுக்கு மட்டும் வரி குறைப்பு செய்து ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவித்துள்ளது.
66 பொருட்களுக்கு வரிகுறைப்பு
இது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவரும், மத்திய நிதிஅமைச்சருமான அருண்ஜெட்லி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது-
ஜி.எஸ்.டி. கவுன்சில் விதித்த வரி பலபொருட்களுக்கு அதிகமாக இருக்கிறது, அதை மறுபரிசீலனை செய்யக் கோரி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து இருந்தன. அதன்படி 133 பொருட்களுக்கான வரி குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதில் 66 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.75 லட்சம் விற்றுமுதல்
இதன்படி, ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு விற்றுமுதல் இருக்கும் வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், ரெஸ்டாரன்ட்கள் மட்டுமே “காம்போசிஷன்” திட்டத்துக்குள் வரலாம் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது. அதை தளர்த்தி ஆண்டுக்கு ரூ.75 லட்சம் வரை விற்றுமுதல் இருப்பவர்களும் அந்த திட்டத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். இவர்கள் 1,2, 5சதவீதம் என 3 பிரிவுகளில் வரி செலுத்தலாம்.
சினிமா டிக்கெட் வரி குறைப்பு
ேகளிக்கை வரியைப் பொருத்தவரை மாநிலங்கள்தான் முடிவு செய்கின்றன. ஆனால், ஜி.எஸ்.டி. வரியில் நாடுமுழுவதும் ஒரே சராசரியாக 30 சதவீதம் விதிக்கப்பட்டு இருந்து. பல மாநிலங்கள் சினிமாவுக்கு ஜி.எஸ்.டி.வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரின. ஆனால், ஜி.எஸ்.டி.யில் சினிமாவுக்கு விலக்கு அளிக்க முடியாது. வேண்டுமானால், மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. வரியை திருப்பி அளித்து, மாநில மொழி சினிமாவை ஊக்கப்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால், சினிமா டிக்கெட்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த வரியைக் குறைத்துள்ளோம். அதாவது ரூ.100க்கும் குறைவான சினிமா டிக்கெட்களுக்கு 18 சதவீதம் வரியும், ரூ.100க்கும் அதிகமான விலை கொண்ட சினிமா டிக்கெட்களுக்கு 28 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஊறுகாய்க்கு 12 சதவீதம்
சமையலில் பயன்படும் ஊறுகாய், கடுகு சாஸ், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், காய்கறிகள், பழங்கள், சாஸ், இன்ஸ்டன்ட் புட் உள்ளிட்டவைகளுக்கு முன்பு 18 சதவீதம் வரி இருந்தது, இதை 12 சதவீதமாக குறைத்துள்ளோம்.
ஊதுபத்தி, இன்சுலின்
சாமானியர்கள் முதல் வசதிபடைத்தவர்கள் வரை வழிபாடுக்கு பயன்படும் ஊதுபத்திகளுக்கு வரி 12 சதவீதம் இருந்தது, அதை 5 சதவீதமாகக் குறைத்துள்ளோம். சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படும் இன்சுலின் மருந்துகளுக்கு வரி 12 சதவீதத்தில் இருந்து 5சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஸ்கூல்பேக்
பிளாஸ்டிஸ் தார்பாலின், பிளாஸ்டிக் மெத்தைகள், மாணவர்கள் பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் “ஸ்கூல்பேக்” ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டு இருந்த 28 சதவீத வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வரிநீக்கம்
பள்ளி குழந்தைகள் படம் வரையும் ஓவியப் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த 12 சதவீத வரிநீக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் பிரின்டர்கள்
வீட்டுபாடம் செய்யும், செய்முறை புத்தகங்களுக்கு வரி 18சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பிரின்டர்களுக்கு 28 சதவீத வரியிலிருந்து 18 சதவீதமாக ஆக்கப்பட்டுள்ளது.
சமையல் கரண்டிகள்
சிமென்ட் பைப்கள், குழாய்களுக்கான வரி 28சதவீதத்தில் இருந்து 18சதவீதமாகவும் சமையலுக்கு பயன்படும் சிறிய கரண்டிகள், உள்ளிட்ட பொருட்களுக்கான வரி 18சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

டிராக்டர் உதிரிபாகங்கள்
டிராக்டர்களுக்கான உதிரி பாகங்களுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. “டென்டல் வேக்ஸ்” விதிக்கப்பட்ட வரி 28 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
வரும் 18-ந்தேதி ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் கூடுகிறது. அதில் லாட்டரிக்கான வரி, இ-கட்டணத்துக்கான வரி உள்ளிட்டவைகள் குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
