ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால், இறந்த பேத்தியின் உடலை, தோளில் சுமந்து சென்றுள்ளார் அவரின் தாத்தா. இந்த சம்பவம் அரியானாவில் நடந்துள்ளது.

அரியானா மாநிலம், பரிதாபாத்தை சேர்ந்தவர் சிறுமி லட்சுமி. இவருக்கு 9 வயதாகிறது. லட்சுமிக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலை அடுத்து, லட்சுமியை அவரின் தாத்தா அருகில் உள்ள தனியார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, தனியார் மருத்துவமனை கேட்ட பணம் தன்னால் தர முடியாததை அடுத்து, அருகில் உள்ள அரசுமருத்துவமனையில் லட்சுமியை நேற்று சிகிச்சைக்காக சேர்த்தார்.

ஆனால், லட்சுமிக்கு, சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் காலதாமதம் செய்து விட்டனர். இதனால், சிறுமி லட்சுமி, பரிதாபமாக உயிரிழந்தார். லட்சுமியின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல, மருத்துவமனை நிர்வாகத்திடம் அவரின் தாத்தா ஆம்புலன்ஸ் வசதியைக் கேடடுள்ளார்.

ஆனால், அவருக்கு ஆம்புலன்ஸ் சேவையை அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவில்லை. தனியார் ஆம்புலன்ஸ் சேவையை நாடவும் தன்னிடம் பணம் இல்லாததால், பேத்தியின் உடலை தனது தோளில் சுமந்து கொண்டு சென்றுள்ளார்.

இறந்த பேத்தியின் உடலை தூக்கிச் செல்வதைக் கண்ட பொதுமக்களில் சிலர் செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தங்கள் கையிலிருந்த பணத்தைக் கொண்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து, லட்சுமியின் உடலை ஏற்றி அவர்களது கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.

சமீக காலமாக வட இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் கூறி வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.