நாடு முழுவதும் எப்போது ரயில், விமான சேவை தொடங்கும் என விவாதிப்பது பயனற்றது  என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த ஏப்ரல்  14ம் தேதி வரை 21  நாட்களுக்கு மத்திய அரசு ஊரடங்கு அமல்படுத்தியது. இருப்பினும், கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால், மேலும், ஊரடங்கை  நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், மத்திய அரசு அறிவிப்பிற்கு முன்பாகவே சில மாநில அரசுகள் ஊரடங்கை தங்கள் மாநிலத்தில் நீட்டித்து உத்தரவிட்டனர். 

தொடர்ந்து, கடந்த 14-ம்  தேதி நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, ஊரடங்கு  உத்தரவை மே-3-ம் தேதி வரை நீட்டித்து உத்தவிட்டார். ஊரடங்கு அமலில் உள்ள  காரணத்தினால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள், ரயில் சேவை, பேருந்து சேவை உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், சரக்கு   ரயில் சேவை மற்றும் அவசர விமான சேவைக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில் மக்கள் எதிர்கொண்டு வரும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், ரமேஷ்  போக்ரியால், பியூஸ்கோயல், ராம் விலாஸ் பஸ்வான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாடு முழுவதும் எப்போது ரயில், விமான சேவை தொடங்கும் என விவாதிப்பது பயனற்றது. ரயில், விமான சேவையை எப்போது தொடங்குவது பற்றி இறுதி முடிவு எடுக்கவில்லை என கூறியுள்ளார். ஆனால்,  ரயில், விமான சேவைகளை சில வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.