இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்து 18 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இதுவரை 560 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று முதன்முதலில் உறுதியான கேரளாவில், மளமளவென உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை, ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து கட்டுக்குள் வந்துள்ளது. கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 402ஆக உள்ளது. அவர்களில் சுமார் 260 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருப்பது நல்ல செய்தி. தமிழ்நாட்டில் இதுவரை 411 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். வெறும் 16 பேர் மட்டுமே இறந்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 4000ஐ கடந்துவிட்டது. மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதற்கடுத்தபடியாக டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகவுள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 2000ஐ கடந்துவிட்டது. 

தெலுங்கானா, ஆந்திரா, உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து 2 மாநிலங்கள் முழுமையாக மீண்டுள்ளன. 

கோவாவில் மொத்தமாகவே வெறும் 7 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் 7 பேருமே கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்ததால், கொரோனா இல்லாத மாநிலமாக கோவா மாறியது. கோவாவை தொடர்ந்து வடகிழக்கு மாநிலமான மணிப்பூரும் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளது.  மணிப்பூரில் வெறும் 2 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இருவருமே குணமடைந்தனர். இதையடுத்து கோவாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவிலிருந்து மீண்ட மாநிலமாக மணிப்பூர் திகழ்கிறது.