தன் பால் உறவில் ஏற்பட்ட ஈர்ப்பால் கேரளாவில் ஒரு பெண் ஆணாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா ராஜ். இவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், புகுந்த வீடு அவருக்கு வரமாக அமையவில்லை. கணவருடன் அடிக்கடி சண்டை, சச்சரவு எனத் தொடர்ந்ததால், ஒரு கட்டத்தில் வெறுத்துபோய் கணவரிடமிருந்து விவாகரத்து பெற முடிவு செய்து பிரிந்துவிட்டார்.

தன் பிழைப்பை ஓட்ட வேலைக்கு சென்றார் அர்ச்சனா. அந்த அலுவலகத்தில் இன்னொரு அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொரு பெண்ணுக்கும் அர்ச்சனாவுக்கும் வேலை நிமித்தமாக நட்பு மலர்ந்தது. சில மாதங்களில் அந்த பெண் அர்ச்சனா வேலை பார்க்கும் கிளைக்கே பணிமாற்றம் ஆனார். ஒரே இடத்தில் அவர்கள் வேலை செய்தபோது அவர்களுக்குள் இன்னும் நெருக்கம் அதிகமானது. குடும்ப வாழ்க்கை சரியாக அமையாத விரக்தியில் இருந்த அர்ச்சனாவுக்கு, அந்தப் பெண்ணுடனான நட்பு இனிப்பாக இருந்தது.

இப்படியாக சென்றுகொண்டிருந்த  நட்பில் ஓர் இடைஞ்சல் ஏற்பட்டது. அர்ச்சனாவின் தோழிக்கு அவரது வீட்டில் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினர். தன் தோழிக்கு திருமணம் ஆவதை அர்ச்சனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆத்திரமடைந்த அர்ச்சனா, அவரது தோழியிடம் தன்னையே திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த விபரீத அழைப்பை அவரது தோழி மறுத்திருக்கலாம். ஆனால், அவரோ அர்ச்சனாவை ஆணாக மாறவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

தான் ஆசையாக விரும்பும் பெண்ணுக்காக இதை ஏற்றுக்கொண்ட அர்ச்சனா,  ஆணாக மாறும் சிகிச்சையை செய்துகொண்டார். தன் பெயரையும் தீபு என மாற்றிக்கொண்டார். பின்னர், தன் தோழியை அணுகி திருமணம் செய்துகொள்ளும்படி அர்ச்சனா என்ற தீபு வற்புறுத்திவந்துள்ளார். ஆனால், அந்தப் பெண் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அர்ச்சனா, அவரது தோழி மீது போலீஸில் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுபற்றி கேரள போலீஸார் தற்போது விசாரித்துவருகிறார்கள்.

இரு பெண்களுக்கு இடையேயான நட்பு விபரீதமாக மாறியது அவர்கள் குடும்பத்தினரிடையே மட்டுமல்லாமல், ஊர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.