பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடையின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாகக் குறைந்தது.

ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தி இந்த நேரத்தில், ரூபாய் நோட்டு தடையின் தாக்கம் இன்னும் பொருளாதாரவளர்ச்சியில் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

அதேசமயம், சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6.9 சதவீதாக  உயர்ந்துள்ளது.

இதற்கு முன் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 7.9 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி இருந்தது.

ஆனால், நடப்பு 2017-18ம்  நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.7சதவீதமாகக் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் இருந்த 4.6சதவீத்துக்கு இணையாக சரிந்து விட்டது.

உற்பத்தி துறையைப் பொருத்தவரை 10.7 சதவீதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து கடந்த காலாண்டில் 1.2 சதவீதம் சரிந்துள்ளது.

மத்தியஅரசின் அறிக்கையின்படி, சுரங்கம், சிமென்ட், உருக்கு உள்ளிட்ட 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி கடந்த ஜூலை மாதத்தில் 2.4சதவீதமாக் குறைந்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் நோட்டு தடையை கொண்டு வந்ததில் இருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடிமேல் அடி வாங்கி வருகிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 6.1 சதவீதமாக சரிந்தது, இப்போது அதைக் காட்டிலும் மோசமாகி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் 5.7 சதவீதமாகக் சரிந்துள்ளது.