Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் நடைபெற்ற ரயில் விபத்துகள்: எந்த அமைச்சரின் கீழ் எத்தனை விபத்துகள்?

இந்தியாவில் நடைபெற்ற ரயில் விபத்துகள் மற்றும் எந்தெந்த அமைச்சர்களின் கீழ் எத்தனை விபத்துகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்த முழு பட்டியல் வெளியாகியுள்ளது

Full list of Train accidents in indian railways 1995 to 2023 and who are the rail ministers
Author
First Published Jun 4, 2023, 2:51 PM IST

ஒடிசா மாநிலம்  பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மேற்குவங்க மாநிலம் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் நேற்று முன் தினம் இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு, முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து குறித்து உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஒடிசா ரயில் விபத்து தொடர்பான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மின்னணு இன்டர்லாக் மாற்றத்தால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரயில்கள் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேசமயம், இது அரசியல் செய்யும் நேரமல்ல எனவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் துணை நின்று அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் ஒருசாரார் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். இதனிடையே, இந்தியாவில் நடைபெற்ற ரயில் விபத்துகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கவச் இயந்திரம்... பாதுகாப்பில் அலட்சியம்: சு.வெங்கடேசன் எம்.பி., காட்டம்!

இந்த பின்னணியில், 1995ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற்ற ரயில் விபத்துகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதாவது, மேற்கண்ட ஆண்டுகளில் எத்தனை ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது; எத்தனை ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது; எத்தனை ரயில்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதர விபத்துகள் மற்றும் இந்த விபத்துகளில் சிக்கி எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? எத்தனை பேர் காயமடைந்துள்ளனர்? என்பது குறித்த முழு பட்டியல் வெளியாகியுள்ளது.

 

 

அதன்படி, அதிகபட்சமாக 2000-01ஆம் ஆண்டில் 473 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக 1999-2000ஆம் ஆண்டில் 616 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த ஆண்டில் அதிகபட்சமாக 1121 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேபோல், எந்தெந்த அமைச்சர்களின் கீழ் எத்தனை விபத்துகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்த பட்டியலும் வெளியாகியுள்ளது. அதன்படி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சராக இருந்த போது, 54 ரயில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. 839 ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. அவர் பொறுப்பில் இருந்தபோது மட்டும் நடைபெற்ற ரயில் விபத்துகளில் 1451 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ரயில்வே அமைச்சராக இருந்த போது, 79 ரயில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. 1000 ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. அவர் பொறுப்பில் இருந்தபோது மட்டும் நடைபெற்ற ரயில் விபத்துகளில் 1527 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது, 51 ரயில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. 550 ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. அவர் பொறுப்பில் இருந்தபோது மட்டும் நடைபெற்ற ரயில் விபத்துகளில் 1159 பேர் உயிரிழந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios