சாதி கொடுமையால் ஐஐடி மாணவர் தற்கொலை: குற்றப் பத்திரிகையில் வெளியான அதிர்ச்சி தகவல்
மும்பை ஐஐடி மாணவர் தர்ஷன் சொலங்கி தற்கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சமீபகாலமாக ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாக நடந்துவருகிறது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி மும்பை ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்துகொண்டர். போவாய் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி விடுதியில் 7ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தர்ஷன் சோலங்கி இறந்துபோனார்.
இது தொடர்பான வழக்கை காவல்துறை விசாரித்து வந்த நிலையில், சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை அந்தக் குழுவின் வசம் மாறியது. மும்பை ஐஐடியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் அதனால்தான் மாணவர் தர்ஷன் சோலங்கி அவர் தற்கொலை முடிவை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார் என மாணவர் குழுவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், காவல்துறை தாக்கல் செய்துள்ள இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பட்டியலினத்தினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை காவல்துறையினர் இந்தக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், கல்லூரியில் நிலவும் சாதி பாகுபாடு பற்றி மாணவர் தர்ஷன் தன் தாயிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. தான் எந்தச் சாதியைச் சேர்ந்தவன் என்று தெரிந்ததும் மற்ற மாணவர்கள் தன்னிட்டம் நடந்துகொள்ளும் விதம் மாறியது என்று தன் தாயுடன் போனில் பேசிய சந்தர்ப்பங்களில் தர்ஷன் கூறி இருக்கிறார்.
2023 ஜனவரியில் மகர சங்கராந்தி விடுமுறையின்போது சோலங்கி தன் சகோதரியிடம் இதைப்பற்றி பேசியுள்ளார். சோலங்கியின் அத்தையும், அதனை கேட்டிருக்கிறார். சாதி குறித்து அறிந்ததும் பிற மாணவர்கள் தன்னிடம் வேறு விதமாக நடந்துகொண்டதாக சொலங்கி கூறினார் என அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குற்றப்பத்திரிகையில் சில மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட 55 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளன. சொலங்கியை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த சக மாணவர் அர்மான் காத்ரியின் பெயரும் குற்றறப்பத்திரிகையில் உள்ளது.
சோலங்கி மதத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதாவும் அதனால் ஆத்திரம் அடைந்த அர்மான் காத்ரி தர்ஷன் சொலங்கிக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் காவல்துறை சொல்கிறது. சொலங்கி தனது படிப்பை ரசித்து படித்து வந்தது பற்றியும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் சில மாணவர்களும் நண்பர்களும் தான் இலவசக் கல்வி பெறுவதாக கூறி எப்பொழுதும் தன்னை கேலி செய்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் என சோலங்கியின் அத்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது காவல்துறை தன் குடும்பத்தை கொடுமைபடுத்தியது என மாணவர் தர்ஷன் சொலங்கியின் தந்தை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய பாதிரியார் பிஷப் பிராங்கோ முலக்கல் ராஜினாமா