நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்து அரசு நிர்வாகம் கட்டணம் வசூலித்து வருகிறது. சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ், மருத்துவமனை, குடிநீர் வசதி, கழிப்பறை உள்பட அடிப்படை தேவைகள் அமைக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் அதற்கான பேச்சுக்கே இடமில்லை.

குறிப்பாக ஒவ்வொரு சுங்கச்சாவடிகளுக்கு ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு செல்லும் பகுதிகளில் சுமார் அரை மணிநேரத்துக்கு மேலாக வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுவது வாகன ஓட்டிகளுக்கு சகஜமாகிவிட்டது. ஆனால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.

இதில் சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகள், பஸ்கள், வேன், கார், ஆட்டோ என பல்வேறு வாகனங்களுக்கு தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு இருந்தார். அதில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அளித்த விளக்கத்தில், ”சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணம் வரி இல்லை. வாகன ஓட்டிகளிடம் சேவை கட்டணமாகவே வசூலிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதனால் சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருந்தால் அவர்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளது.