குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000: கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் முதலிய அறிவிப்புகள் கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. க்ருஹ ஜோதி, க்ருஹ லக்ஷ்மி, அன்ன பாக்யா, யுவ நிதி & சக்தி ஆகிய ஐந்து உத்தரவாதங்களை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 தொகை வழங்கப்படும், பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் உள்ளிட்ட அறிவிப்புகள் உள்ளன. முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம் எனவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது. தென்னை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, பால் மானியம் லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக உயர்வு ஆகியவையும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், ரன்தீப் சுர்ஜேவாலாஉள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று (திங்கட்கிழமை) வெளியானது. அதில் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகம், இலவச பால் விநியோகம் உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் கூறப்பட்டிருக்கிறது.
ஏழைகளுக்கு மாதந்தோறும் இலவசமாக 5 கிலோ அரிசி, பருப்பு, தினம் தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும். பழமையான கோயில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். தற்போதைய பாஜக சார்பில் 707 பேர், காங்கிரஸிலிருந்து 651 பேர், சுயேச்சையாக 1,720 பேர் என மொத்தம் 3,632 வேட்பாளர்கள் கர்நாடக தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.