இந்தியாவின் முன்னாள் பிரதமரான எச்.டி. தேவகவுடா, சிறுநீரகப் பாதை தொற்று மற்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JD(S)) மூத்த தலைவருமான எச்.டி. தேவகவுடா (வயது 92), சிறுநீரகப் பாதை தொற்று (UTI) மற்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.சி.யூ-வில் சிகிச்சை

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தேவகவுடா, நேற்று (அக்டோபர் 6) மாலை ஓல்ட் ஏர்போர்ட் சாலை பகுதியில் அமைந்துள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை இன்று (அக்டோபர் 7) வெளியிட்ட அறிக்கையில், "தேவகவுடா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது அதற்கான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

சிறுநீரகப் பாதையில் தொற்று

பெங்களூரு ஊரக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேவகவுடாவின் மருமகனுமான டாக்டர் சி.என். மஞ்சுநாத், இதுகுறித்து தகவல் அளித்துள்ளார். அவர் பேசுகையில், "சிறுநீரகப் பாதை தொற்று காரணமாக அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் குளிர் ஏற்பட்டுள்ளது. அவரது சிறுநீரக செயல்பாடு தொடர்பான அளவுகளிலும் (Renal Parameters) மாறுபாடு இருந்ததால், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஓரிரு நாட்களில் அவரை பொது வார்டுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், அவர் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்றும் டாக்டர் மஞ்சுநாத் குறிப்பிட்டார்.

92 வயதான போதிலும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தேவகவுடா, அண்மையில் கட்சி சார்ந்த பல கூட்டங்களில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.