எனக்கு ஓய்வே கிடையாது... டிஸ்சார்ஜ் ஆனதும் மாஸ் காட்டும் பாமக நிறுவனர் ராமதாஸ்!
பாமக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 'எனக்கு ஓய்வே கிடையாது' என அவர் உற்சாகமாகத் தெரிவித்தார்.

மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராதமாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், மருத்துவமனையில் இருந்து இன்று (அக்டோபர் 7, 2025, செவ்வாய்க்கிழமை) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உடல்நலக் குறைவு காரணமாக அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5, 2025) சென்னை வடபழனியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று (திங்கட்கிழமை) ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நலம் விசாரித்த தலைவர்கள்
இந்நிலையில், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ராமதாஸை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்தனர். சிகிச்சைக்குப் பிறகு டாக்டர் ராமதாஸ் நலமாக இருப்பதாகவும் அவரைச் சந்தித்த தலைவர்கள் தெரிவித்தனர்.
எனக்கு ஓய்வே இல்லை
இந்த நிலையில், டாக்டர் ராமதாஸ் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து பூரண நலத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து திரும்பும்போது, அவரிடம் செய்தியாளர்கள், மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டாக்டர் ராமதாஸ், "எனக்கு ஓய்வே கிடையாது" என்று உற்சாகத்துடன் பதில் அளித்தார்.