நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி கர்ணன், மீன் குழம்புடன் சாப்பாட்டை ருசித்து  சாப்பிடுவதாகவும், சட்ட புத்தகங்களை படித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

நீதிபதி கர்ணன் தற்போது மகிழ்ச்சியான மனநிலைக்கு வந்துவிட்டதாக, அவருடைய வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது-

 ‘‘நீதிபதி கர்ணன் சக கைதிகளாலும் சிறை அதிகாரிகளாலும் மரியாதையாக நடத்தப்படுகிறார். அவர்களுக்கிடையே சுமுகமான உறவு நிலவி வருகிறது.

கர்ணன் சட்டக்கல்லூரி மாணவராக இருந்த தன்னுடைய ஆரம்பகட்ட நாட்களுக்குள் சென்றுவிட்டார். தற்போது சட்ட புத்தகங்களையும், தீர்ப்புகளையும் வாசித்து வரும் கர்ணன், விடுதலைக்குப் பிறகு வழக்கறிஞர் பணியைத் தொடர்வார்.

வங்காள உணவுகளுக்குப் பழகிவிட்ட முன்னாள் நீதிபதி கர்ணன், தென்னிந்திய மற்றும் வங்காள உணவான சாதம் மற்றும் மீன் குழம்பை ருசித்து உண்கிறார்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்தார். இதையடுத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவருக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், கர்ணணனை கைது செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல்கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.

கர்ணன் சார்பில் கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தமிழகம் வந்த கொல்கத்தா போலீஸார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

எனினும், அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஜூன் 11-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.

இதற்கிடையே போலீஸார் கர்ணனை கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் ஜூன் 20-ம் தேதி அன்று கைது செய்தது சிறையில்  அடைத்தனர். ஏறக்குறைய 2 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்து.