கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கர்நாடக முன்னாள் முதல்வா் குமாரசாமியின் மகனின் திருமணம் இன்று மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. லட்சக்கணக்கான உயிர்களை இதுவரை உலகம் இழந்துள்ளது. கொரோனா கோரத்தாண்டவம் உலகத்தில் எந்த ஒரு பகுதியையும் விட்டு வைக்கவில்லை. நல்ல நிகழ்ச்சிகள், சந்தோஷமான விழாக்கள் இல்லாமல் இன்று உலகமே ஒரு மூலைக்குள் முடங்கிப் போய் உள்ளது. தினமும் மரணச் செய்திகள் தான் தலைப்புச் செய்திகளாகி உள்ளன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நடமாட்டம் இல்லாமல் வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மேலும், எந்த ஒரு விஐபியின் திருமணம் என்றாலும் மிக எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர்  எச்.டி.குமாரசாமியின் மகனும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான  நிகில் கவுடாவுக்கும், ரேவதி என்ற பெண்ணுக்கும், கர்நாடகாவின் ராம்நகரம் மாவட்டத்தில்  திருமணம் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நிகிலின் திருமணம் ஆடம்பரமில்லாமல், எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, நிகிலின் திருமணம் இன்று பெங்களூருவில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. அதில் இரு குடும்ப உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு வேறொரு நாளில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என குமாரசாமி தகவல் தெரிவித்துள்ளார்.