ஆந்திரா முன்னாள் சபாநாயகர் கோடலா சிவபிரசாத் ராவ் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்.டி.ராமா ராவ் தெலுங்கு தேசம் கட்சியை 1983-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே கோடலா சிவபிரசாத் ராவ் அக்கட்சியில் இருந்து வந்தார். 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். மாநில உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களை வகித்து வந்தார். இந்நிலையில், ஆந்திரா பிரிக்கப்பட்ட போது ஐதராபாத்தில் ஆந்திர சட்டப்பேரவை கட்டிடத்தில் இருந்த பொருட்களை அமராவதி சட்டப்பேரவை கட்டிடத்திற்கு மாற்றும் போது ஏராளமான பர்னிச்சர் பொருட்கள் மாயமானதாக புகார் எழுந்தது. முதல்வராக பொறுப்பேற்றதும் ஜெகன்மோகன் ரெட்டி இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். 

அப்போது பர்னிச்சர் பொருட்களை அப்போதைய சபாநாயகர் கோடலா சிவபிரசாத் தனது வீட்டுக்கு அனுப்பியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், நான் அந்த பொருட்களை திருடவில்லை. தற்காலிக வளாகத்தில் வைத்தால் அவை சேதமடையும் எனக்கருதி எனது வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் என அவர் விளக்கம் அளித்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள வீட்டில் காலை உணவு சாப்பிட்ட பின்னர் தன்னுடைய அறைக்கு சென்ற கோடலா சிவபிரசாத் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். அப்போது, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர். இவரது மறைவுக்கு சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.