இந்திய ராணுவம், ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய உலகின் முதல் 'ராம்ஜெட்' தொழில்நுட்ப பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த அதிநவீன குண்டுகள், தற்போதுள்ள பீரங்கிகளின் தாக்குதல் தூரத்தை 50% வரை அதிகரிக்கிறது.

இந்திய ராணுவம் தனது ஆயுத பலத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், உலகிலேயே முதல்முறையாக 'ராம்ஜெட்' (Ramjet) தொழில்நுட்பத்தால் இயங்கும் பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது.

சென்னை ஐஐடி (IIT Madras) மற்றும் ராணுவத் தொழில்நுட்ப வாரியம் (ATB) இணைந்து உருவாக்கியுள்ள இந்த அதிநவீனத் தொழில்நுட்பம், தற்போது இறுதிக்கட்டச் சோதனையில் உள்ளது.

ராம்ஜெட் தொழில்நுட்பம் என்றால் என்ன?

பொதுவாக ஏவுகணைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்தத் தொழில்நுட்பம், இப்போது முதன்முறையாக 155 மிமீ பீரங்கி குண்டுகளில் புகுத்தப்பட்டுள்ளது.

இந்த குண்டுகள் பீரங்கியில் இருந்து ஏவப்படும்போது, சுமார் Mach 2 (ஒலியின் வேகத்தைப் போல் 2 மடங்கு) வேகத்தை எட்டுகின்றன. இந்த அதீத வேகத்தில், குண்டின் முன்பகுதி வழியாக நுழையும் காற்று தானாகவே அழுத்தப்படுகிறது.

அழுத்தப்பட்ட காற்று எரிபொருளுடன் இணைந்து எரிந்து, ஒரு சக்திவாய்ந்த உந்துவிசையை (Thrust) உருவாக்குகிறது. இது குண்டு நீண்ட தூரம் பயணிப்பதற்கான ஆற்றலை வழங்குகிறது.

Scroll to load tweet…

தாக்குதல் தூரம் 50% அதிகரிப்பு

சாதாரண பீரங்கி குண்டுகளை விட, இந்த ராம்ஜெட் குண்டுகள் 30% முதல் 50% வரை அதிக தூரம் சென்று இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டவை.

இதன் மூலம் எதிரி நாட்டு எல்லைக்குள் வெகு தொலைவில் உள்ள இலக்குகளையும் இந்திய ராணுவத்தால் துல்லியமாகத் தாக்க முடியும்.

இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமே, ராணுவத்திடம் ஏற்கனவே உள்ள 155 மிமீ பீரங்கிகளிலும், அமெரிக்காவின் எம்777 (M777) ஹோவிட்சர் பீரங்கிகளிலும் இதைப் பயன்படுத்த முடியும் என்பதுதான். இதற்காகத் தனியாகப் புதிய பீரங்கிகளை வாங்க வேண்டிய அவசியமில்லை.

சென்னை ஐஐடி அபார கண்டுபிடிப்பு

சென்னை ஐஐடி-யின் விண்வெளிப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் பி.ஏ. ராமகிருஷ்ணா மற்றும் எஸ். வர்மா ஆகியோர் பல ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

"இது ஒரு காற்று-சுவாச இயந்திரம் (Air-breathing engine) என்பதால், இதற்குத் தனியாக கம்ப்ரஸர்களோ அல்லது டர்பைன்களோ தேவையில்லை. இதனால் எடையும் குறைவு, அதே சமயம் அதிக தூரம் பாயும் திறனும் கொண்டது," என்று பேராசிரியர் ராமகிருஷ்ணா விளக்கியுள்ளார்.

ராஜஸ்தானின் பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் நடத்தப்பட்ட சோதனைகள் ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்துள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தும் போது, பீரங்கி படையில் ராம்ஜெட் குண்டுகளைப் பயன்படுத்தும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.