நொய்டாவைச் சேர்ந்த ஷிவானி, BSF கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்த ஐந்தே மாதங்களில் தலைமை கான்ஸ்டபிளாக பதவி உயர்வு பெற்றுள்ளார். BSF வரலாற்றில் முதல் முறையாக இந்த விரைவான பதவி உயர்வு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டா நகரைச் சேர்ந்த ஷிவானி என்பவர், எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) கான்ஸ்டபிளாகப் பணியில் சேர்ந்த ஐந்தே மாதங்களில் தலைமை கான்ஸ்டபிளாகப் பதவி உயர்வு பெற்று சாதனை படைத்துள்ளார். 60 ஆண்டுகால பி.எஸ்.எஃப். வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம்

ஷிவானி நடப்பு ஆண்டு ஜூன் 1-ம் தேதி பி.எஸ்.எஃப். கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார்.

பிரேசில் நாட்டில் கடந்த ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற்ற 17-வது உலக வுசு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற அவர், வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்தச் சாதனையைப் பாராட்டி அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய ஆயுத போலீஸ் படையில் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி உயர்வு பெறுவது இதுவே முதல் முறையாகும்.

ஷிவானியின் தந்தை தச்சு வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…

ஷிவானியை கவுரவித்த இயக்குநர் ஜெனரல்

இந்நிலையில், ஷிவானிக்கு பி.எஸ்.எஃப். இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி இன்று (வியாழக்கிழமை) தலைமை கான்ஸ்டபிள் பதவி உயர்வுக்கான ஆவணங்களை வழங்கி கௌரவித்தார்.

முன்னதாக, நடப்பு ஆண்டு ஜூலை 18-ம் தேதி, பி.எஸ்.எஃப். கான்ஸ்டபிள் அனுஜ் என்பவருக்கு இதே இயக்குநர் ஜெனரல் தலைமை கான்ஸ்டபிள் என்ற பதவி உயர்வை வழங்கினார். அனுஜ், சீனாவின் ஜியான்ஜின் நகரில் நடந்த 10-வது சான்டா உலகக் கோப்பை வுசு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காகப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.