உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தங்களை இந்தியாவில் படிக்க அனுமதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நேட்டா அமைப்பில் உக்ரைன் இணையவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் போர்நிறத்தம் தொடர்பாக நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியை தழுவிய நிலையில், 18 வது நாளாக போர்தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே போர் பதற்றம் காரணமாக, உக்ரைனிலிருந்து கிட்டதட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனில் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களாக அங்கு குடியேறிய இந்தியர்களை காப்பாற்ற, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆப்ரேஷன் கங்கா எனும் திட்டத்தின் கீழ் அண்டை நாடுகளின் உதவியுடன் விமானம் மூலம் இந்தியர்கள் தாயகம் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: உக்ரைனின் லிவிவ் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்... 35 பேர் பலி; 60 பேர் படுகாயம்!!
ரஷ்யா - உக்ரைன் போரால் தாயகம் திரும்பி உள்ள மாணவர்கள் சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ள மாணவர்களாகிய நாங்கள் தற்போது இந்தியா திரும்பியிருக்கிறோம். எங்களை தற்போது இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க எந்த விதிமுறைகளும் நடைமுறையில் இல்லை. மொத்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளோம்.
எனவே போரால் பாதிக்கப்பட்டு திரும்பியுள்ள நாங்கள் எந்த நிலையில் படிப்பை தவறவிட்டோமோ, அதேநிலையில் இருந்து இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து படிப்பை தொடர்வதற்கு மத்திய அரசுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும். போரை முன்னிட்டு அப்படிப்பட்ட சிறப்பு அனுமதியை வழங்குவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள வாழ்வுரிமை, நீதி, சமத்துவம், சம உரிமையைக் காப்பதோடு மட்டுமின்றி, மக்களின் நலன்காக்கும் அரசு என்ற இந்தியாவின் அடிப்படைக் கொள்கையையும் பாதுகாப்பதாக அமையும்.
மேலும் படிக்க: உக்ரைன் - ரஷ்யா போர்.. உள்நாட்டில் பாதுகாப்புத்துறையை பலப்படுத்தனும்..பிரதமர் மோடி பேச்சு..
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனுமீது ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், உக்ரைனில் இருந்து படிப்பு பாதிக்கப்பட்டு திரும்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களும் பயனடைவர் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் நிலவி வரும் மோதல் காரணமாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் , ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
