மகாராஷ்ராவில் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் கண்டறியப்பட்டது. தற்போது 31 மாநிலங்களில் தடம் பதித்துள்ளது. இதில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,000 நெருங்கி வருகிறது. 251 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதால், ஹாட்ஸ்பாட் பகுதிகளான புனே மற்றும் மும்பை  உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை அரசு திரும்ப பெற்றுள்ளது. மேலும் பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதிகமாக பாதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக மகாராஷ்ரா உருவெடுத்துள்ளது.  இதன்மூலம் பொருளாதார தலைநகரம், கொரோனா தலைநகரமாக மாறியுள்ளது.

இந்நிலையில், மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள முதல்வர் உத்தவ் தக்கரேவின் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடன் நெருங்கிய தொடர்புடைய 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, மும்பை மாநகராட்சி ஊழியர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தற்போது பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். அலுவலக பணிக்காக மட்டும் வர்ஷா பங்களாவுக்கு வந்து செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.