தனது தகப்பனார் இறந்து குறித்த தகவலை வங்கிக்கு தெரிவிக்காமல், கடந்த 37 வருடங்களாக பென்சன் பணம் பெற்று வந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் கே.கே.சர்க்கார். இவர் வனத்துறையில் பணிபுரிந்து கடந்த 1955 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். 1965 ஆம் ஆண்டு முதல் கான்வெண்ட் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் பென்சன் கணக்கைத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 1981 ஆம் ஆண்டு கே.கே.சர்கார் இறந்துள்ளார். 

இவரின் மகனான யூ.கே.சர்க்கார், தனது அப்பா இறந்தது குறித்த தகவலை, வங்கிக்கு தெரியப்படுத்தாமல் பென்சன் பணம் வாங்டிக வந்துள்ளார். இந்த நிலையில், வருமான வரித்துறையின் அறிவுரையின்படி எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் நூறு வயதுக்கும் மேற்பட்ட பென்சன்தாரர்களை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 

அப்போது யூ.கே.சர்க்காரின் வீட்டில் கணக்கெடுப்பு நடத்த சென்ற அதிகாரிகள், அவரது மகன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். தனது தாத்தா கே.கே.சர்கார், 1981 ஆம் ஆண்டே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், யூ.கே.சர்க்கார், தனது அப்பாவின் பெயரில் வந்த பென்சன் பணத்தை கடந்த 37 ஆண்டகளாக அனுபவித்து வந்தது தெரியவந்தது.

பென்சன்தாரர்களுக்கான வருடாந்திர ஆய்விற்காக போலி ஆவணங்களையும், யூ.கே.சர்கார் தயார் செய்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. யூ.கே.சர்க்காரின் அம்மா பெயரில், அதே வங்கியில் நான்கு விதமான கடன்கள் பெற்று, அதற்கு தன் மனைவியைப் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, யூ.கே.சர்க்கார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.