அடுத்த அதிர்ச்சி.. ஹைதராபாத் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. பயணிகளின் நிலை என்ன?
ஹைதராபாத் அருகே சென்று கொண்டிருந்த ஃபல்க்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹவுராவில் இருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா எக்ஸ்பிரஸிஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ரயிலில் S4, S5, S6, CH ஆகிய 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த ரயில் பொம்மைப்பள்ளி மற்றும் பகிடிப்பள்ளி இடையே நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீயில் கருகின. இந்த ரயிலில் சுமார் 1500 பயணிகள் உள்ளனர். எனினும், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிய நேரத்தில் தீ விபத்து கண்டறியப்பட்டு பயணிகள் கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கபப்ட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள், மீட்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.
கேரளாவில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் : என்னென்ன அறிகுறிகள்? நோயை எப்படி தடுப்பது?
எனினும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீ பிடித்து எரிந்த பெட்டிகளுக்கும் மற்ற பெட்டிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு அகற்றப்பட்டது. இதன் காரணமாக மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. ரயிலில் சார்ஜ் செய்யும் இடத்தில் பயணி ஒருவர் சிகரெட்டை புகைத்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக, அந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஃபலாக் நுமா எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 80 முதல் 100 கிமீ வேகத்தில் இயங்கும் ரயிலாகும். புவனகிரி அருகே ரயிலின் வேகத்தை குறைத்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் S4, S5, மற்றும் எஸ்6 பெட்டிகள் எரிந்து நாசமானது.
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு, சரக்கு ரயில் தடம் புரள்வது போன்ற ரயில் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.