வங்காளதேசத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, போலி செய்தி தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

வங்காளதேசத்தில் வரும் 30ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் பல்வேறு கட்சி மற்றும் வாக்காளர்கள் குறித்து, சமூக வலைதளங்களில் செய்திகள் தொடர்ந்து வருகின்றன. இதில், வதந்திகளும் ஏராளமானவை உள்ளதாக புகார்கள் வந்தன.

இந்நிலையில் வங்காளதேசத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களை கொண்டு பல போலி செய்தி தளங்கள் உருவாக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளை பற்றிய தவறான தகவல்களை பரப்புவதாக பல்வேறு கட்சியினரிடம் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து சட்டப்பூர்வமான செய்தி ஊடகங்களைப் போன்றே வடிவமைக்கப்பட்ட 9 ‘பேஸ்புக்’ பக்கங்களும், எதிர்க்கட்சிகள் பற்றிய தவறான தகவல்களை பரப்பும் 6 போலி தனிநபர் கணக்குகளும் மூடக்கப்பட்டுள்ளன.

இவை வங்காளதேச அரசுடன் தொடர்புடையவர்களால் உருவாக்கப்பட்டவை என்று ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் கம்ப்யூட்டர் குற்ற தடுப்பு பிரிவின் தலைவர் நத்தானியேல் கிளெய்ச்சர் கூறியுள்ளார். மேலும், டுவிட்டர் பக்கத்திலும் 15 கணக்குகளை தற்காலிகமாக மூடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.