Fact Check: திரிபுரா தேர்தல் குறித்து போலி கருத்துக்கணிப்பை பகிர்ந்த அசாம் காங்கிரஸ் தலைவர்
அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பூபென் குமார் போரா திரிபுரா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறியிருப்பதாக ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஜனவரி 19ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன. அதன்படி, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 2ஆம் தேதி வெளியிட இருக்கின்றன. இந்நிலையில் அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பூபென் குமார் போரா திரிபுரா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறியிருப்பதாக ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
அதில் கம்யூனிஸ்ட் கட்சி 34 தொகுதிகளிலும் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் பாஜக 3 தொகுதிகளில் மட்டுமே பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திப்ரா மோதா கட்சி 13 தொகுதிகளையும் மற்ற கட்சிகள் 3 தொகுதிகளையும் கைப்பற்றும், திரிணாமுல் காங்கிரஸ், திரிபுரா மக்கள் முன்னணி ஆகியவை எந்தத் தொகுதியிலும் வெல்லாது எனவும் அதில் சொல்லப்படுகிறது.
ஆனால், இந்தச் செய்தி முழுக்க முழுக்க போலியானது ஆகும். பிபிசி நிறுவனம் அதுபோன்ற கருத்துக்கணிப்பு எதையும் திரிபுராவில் நடத்தவில்லை. பூபென் குமார் தனது ட்வீட்டில் இணைத்துள்ள இந்தப் படம் போட்டோ ஷாப் செய்யப்பட்டது என்று பார்த்தவுடன் தெரிந்துவிடுகிறது.
28.12 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட திரிபுராவில் சென்ற வாரம் நடந்து முடிந்த வாக்குப்பதிவில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு 55 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி கட்சி 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்டுகள் 46 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் போட்டி போடுகிறார். திரிபுரா மன்னர் பரம்பரையைச் சேர்ந்த தேப் வர்மாவின் திப்ரா மோர்த்தா என்ற கட்சியை 42 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் 28 தொகுதிகளில் போட்டியில் உள்ளது.
Italy shipwreck: இத்தாலி கடற்பகுதியில் படகு கவிழ்ந்து குறைந்து 59 அகதிகள் பலி