வலைக்குள் சிக்கிய பாம்புக்கு செயற்கை சுவாசம் அளித்து உயிர்காத்த வனவிலங்கு மீட்பு வீரர் லிஜோ கச்சேரி, நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். மான்கன்றுக்கு சிபிஆர் கொடுத்து உயிர்ப்பித்த லிஜோ, மீண்டும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

மயங்கிய நிலையில் வலைக்குள் சிக்கி அசைவற்று கிடந்த ஒரு பாம்புக்கு, செயற்கை சுவாசம் (CPR) அளித்து உயிரைக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பாம்பைக் காப்பாற்றிய வனவிலங்கு மீட்பு வீரர் லிஜோ கச்சேரியும் நெட்டின்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

ஏற்கனவே மான்கன்றுக்கு சிபிஆர் கொடுத்து உயிர்ப்பித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த லிஜோ கச்சேரி, மீண்டும் ஒருமுறை தனது அசாத்திய திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

மண்டமங்கலத்தைச் சேர்ந்த ராஜீவ் என்பவரது வீட்டின் பின்புறத்தில், கோழிகளைப் பாதுகாப்பதற்காக கட்டப்பட்டிருந்த வலையில் இந்தப் பாம்பு சிக்கியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் வலைக்குள் மாட்டிக்கொண்டு பாம்பு அசைவற்று கிடந்துள்ளது. இதனைக் கண்ட குடும்பத்தினர் உடனடியாக மண்டமங்கலம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சனிக்கிழமை காலை, துணை வனச் சரக அதிகாரி சஜீவ் குமார் மற்றும் வனக் கள அதிகாரி ஸ்ருதி எஸ் நாயர் தலைமையிலான வனத்துறைக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சுமார் ஐந்து அடி நீளமுள்ள சாரைப்பாம்பு அது. அதன் உடலில் உயிர் இருப்பதற்கான அறிகுறியாக மிகவும் சிறிய அசைவுகள் மட்டுமே இருந்தன. உடனே மீட்புப் பணிகளைத் தொடங்க லிஜோ கச்சேரி முன்வந்தார். பாம்பின் கழுத்தைச் சுற்றியிருந்த வலையின் இறுக்கமான பகுதிகளை அகற்றிய லிஜோ, பின்னர் அதன் வாய் வழியாக செயற்கை சுவாசம் அளித்தார். மேலும், பாம்பின் மூளைக்கு ரத்தம் செல்ல உதவுவதற்காக, அதன் வாலைப் பிடித்து தலைகீழாகத் தொங்கவிட்டு, தொடர்ந்து மசாஜ் செய்தார்.

பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. முடிவில் லிஜோ அந்தப் பாம்பைப் பார்த்து, "நீ இப்போ உயிர் பிழைச்சாச்சு, இனி போகலாம் பையா" என்று கூறுகிறார்.

லிஜோவின் அசாத்திய முயற்சியால், சிறிது நேரத்திலேயே பாம்பு மீண்டும் பலம் பெற்று மெதுவாக ஊர்ந்து அங்கிருந்து சென்றுவிட்டது. இச்சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையேயும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.