- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG: கெத்து காட்டிய கில்! கேலி செய்த டக்கெட்டை வாயடைக்க வைத்த சம்பவம்!
IND vs ENG: கெத்து காட்டிய கில்! கேலி செய்த டக்கெட்டை வாயடைக்க வைத்த சம்பவம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் கேப்டன் சுப்மன் கில் அதிரடி சதமடித்து அசத்தினார். இது அவரது நான்காவது சதம் மட்டுமல்ல, பல சாதனைகளை முறியடித்து விமர்சகர்களின் வாயை அடைத்த சாதனையாகும்.

கேப்டன் சுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில், ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் இந்திய அணிக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில், கேப்டன் சுப்மன் கில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி அதிரடியாக சதமடித்து அசத்தினார். இது இந்தத் தொடரில் அவரது நான்காவது சதமாகும். இதன்மூலம், பல சாதனைகளை முறியடித்து, தனது விமர்சகர்களின் வாயை அடைத்திருக்கிறார். குறிப்பாக இங்கிலாந்து கேப்டன் பென் டக்கெட்டுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த மூன்று இன்னிங்ஸ்களில், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை கவலையடையச் செய்த கில், மான்செஸ்டர் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் முக்கியமான கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் டக்கவுட்டாகி, இந்தியா 0/2 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, சுப்மன் கில் களமிறங்கினார். பொறுப்பாகவும் துணிச்சலாகவும் விளையாடி சதத்தை எட்டினார்.
முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, இந்திய அணி சுருட்டி, இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றும் முனைப்பில் இருந்த நிலையில் கேப்டனுக்குரிய பொறுப்புடன் விளையாடி இருக்கிறார்.
700 ரன்கள் கடந்து சாதனை மழை!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை சத்தமில்லாமல் தொடங்கிய சுப்மன் கில், முதல் நான்கு இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் உட்பட 146 சராசரியுடன் 585 ரன்கள் குவித்து அசத்தினார். எனினும், அடுத்த மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்ததால், அவரது சராசரி 90-க்கும் கீழே சரிந்தது.
இந்த திடீர் வீழ்ச்சி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. கில்லின் நிலைத்தன்மை மற்றும் சீம் மூவ்மென்ட் அதிகம் உள்ள பிட்சில் விளையாடும் திறன் குறித்து கேள்விகள் எழுந்தன. ஆனால், மான்செஸ்டர் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் தனது மூன்றாவது சதத்தை அடித்து, 700 ரன்களை கடந்ததன் மூலம் கில் இந்த கவலைகளுக்கு பதிலளித்தார்.
ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்கள் கடந்த இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார். இதற்கு முன் சுனில் கவாஸ்கர் (1971 மற்றும் 1978/79 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2024 இங்கிலாந்துக்கு எதிராக) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 78 ரன்கள் எடுத்து, டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த விராட் கோலியின் சாதனையை சுப்மன் கில் முறியடித்தார். கோலி ஐந்து போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் உட்பட 86.50 சராசரியுடன் 692 ரன்கள் குவித்திருந்தார். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், கில்லின் ரன்கள் 8 இன்னிங்ஸ்களில் 697 ஆக இருந்தது. 700 ரன்கள் இலக்கை அடைய இன்னும் மூன்று ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.
பென் டக்கெட்டுக்கு தகுந்த பதிலடி!
நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 700 ரன்களை கடந்த சுப்மன் கில்லின் சாதனை, அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் ஒரு முக்கிய மைல்கல் மட்டுமல்லாமல், "600 ரன்களுடன் இத்தொடரில் அவர் முடித்துவிட்டார்" என்று கிண்டலடித்த இங்கிலாந்து கேப்டன் பென் டக்கெட்டுக்கு ஒரு சரியான பதிலடியும் ஆகும்.
லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்தியா 193 ரன்கள் இலக்கை துரத்தும்போது, 41/2 என்ற நிலையில் கில் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த கில்லை, களமிறங்கும் போது "600 ரன்கள், இத்தொடரில் இவன் கதை முடிந்தது. இந்த ஆளுக்கு 600 ரன்கள் போதும்" என்று டக்கெட் தன் அணி வீரர்களிடம் கிண்டலாகக் கூறினார்.
ஆனால், சுப்மன் கில் அந்த கேலியே தனக்கு உந்துதலாக மாற்றிக்கொண்டார். மான்செஸ்டர் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ரன்களைக் குவித்து, 700 ரன்களை நிறைவு செய்து, தான் இன்னும் முடிவடையவில்லை என்பதை ஒரு சக்திவாய்ந்த அறிக்கையாக வெளிப்படுத்தியுள்ளார்.
கேரி சோபர்ஸ் சாதனையை சமன் செய்தார்!
கில்லின் சிறப்பான இன்னிங்ஸ், 238 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தபோது முடிவுக்கு வந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த கில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 700 ரன்கள் கடந்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த மேற்கு இந்தியத் தீவுகளின் ஜாம்பவான் கேரி சோபர்ஸின் 722 ரன்கள் சாதனையையும் கில் சமன் செய்தார்.
இந்திய கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் அடித்த 732 ரன்கள் சாதனையை முறியடிக்க சுப்மன் கில்லுக்கு இன்னும் 11 ரன்கள் தேவை. ஜூலை 31 அன்று ஓவலில் தொடங்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் கில் கவாஸ்கரின் சாதனையையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய பேட்ஸ்மேன் டெஸ்ட் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 1990 இல் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்த மைதானத்தில் சதமடித்திருந்தார். அந்த சதம் சச்சின் அடித்த முதல் டெஸ்ட் சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டியிலும் சுப்மன் கில் தனது சிறப்பான ஃபார்மைத் தொடர்ந்தால், ஒரு டெஸ்ட் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த டான் பிராட்மேனின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது. 1936/37 ஆஷஸ் தொடரில் பிராட்மேன் 90 சராசரியுடன் 3 சதங்கள், ஒரு அரை சதம் உட்பட 810 ரன்கள் குவித்தார்.