அடப்பாவமே! கூகுள் வேலையில் சேர்ந்த இளைஞரை கிழிச்சு தொங்கவிட்ட நெட்டிசன்கள்
விண்ட்சர்ஃப் நிறுவனத்தின் CEO வருண் மோகன், டீப்மைண்டில் இணைந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. OpenAI வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அவர் திடீரென டீப்மைண்டில் இணைந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் டீப்மைண்டில் இணைந்த விண்ட்சர்ஃப் AI நிறுவனர்கள்
விண்ட்சர்ஃப் (Windsurf) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) வருண் மோகன், கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவான டீப்மைண்டில் (DeepMind) இணைந்த சில நாட்களிலேயே, சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் மோகன், தனது நிறுவனத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டுச் சென்றதாகப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கடந்த மாதம் Windsurf நிறுவனத்தை OpenAI வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், வருண் மோகன் தனது இணை நிறுவனர் டக்ளஸ் சென் உடன் கூகுளின் டீப்மைண்டில் இணைந்துள்ளார்.
வருண் மோகனின் இந்த திடீர் வெளியேற்றம் Windsurf நிறுவனத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எனினும், வார இறுதி நாட்களில் பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, Cognition என்ற மற்றொரு AI நிறுவனம் Windsurf ஐ கடைசி நிமிடத்தில் ககையகப்படுத்தியுள்ளது.
விமர்சனங்களும் ஆதரவும்
முதலீட்டாளர் வினோத் கோஸ்லா, எக்ஸ் தளத்தில் வருண் மோகனை கடுமையாக விமர்சித்துள்ளார். "Windsurf மற்றும் பிற நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்கள் குழுக்களை கைவிட்டுவிட்டு, அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக்கூட பகிர்ந்துகொள்ளாமல் செல்வது மிகவும் மோசமான உதாரணம். இனிமேல் அவர்களுடன் நான் பணியாற்ற மாட்டேன்" என்று வினோத் கோஸ்லா பதிவிட்டுள்ளார்.
இதேபோல், Cognition நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் வூ கூறுகையில், "ஒரு நிறுவனராக, கப்பல் மூழ்கினாலும் அதனுடன் நீங்களும் மூழ்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது" என்று குறிப்பிட்டார்.
இந்த விமர்சனங்கள் தீவிரமடைந்த நிலையில், Y Combinator நிறுவனத்தின் சிஇஓ கேரி டான் வருண் மோகனுக்கு ஆதரவாகக் களமிறங்கினார். "வருண் மோகன் மற்றும் Windsurf குழு ஒரு சிறந்த நிறுவனத்தை உருவாக்கினர். அவரையும் அவரது குழுவையும் இவ்வளவு மோசமாக விமர்சிக்கப்படக் கூடாது. நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் இந்த முடிவு நியாயப்படுத்தப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
யார் இந்த வருண் மோகன்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் மோகன், இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த பெற்றோருக்கு கலிபோர்னியாவின் சன்னிவேலில் பிறந்தார். சான் ஹோசேவில் உள்ள தி ஹார்க்கர் பள்ளியில் படித்த அவர், பின்னர் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) இல் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பட்டங்கள் பெற்றார்.
ஜூன் 2021 இல் Windsurf நிறுவனத்தை இணை நிறுவனர் டக்ளஸ் சென்னுடன் இணைந்து தொடங்கினார். மென்பொருள் மேம்பாட்டு செயல்முறைகளை எளிதாக்கும் AI கருவிகளை உருவாக்குவதில் இந்த ஸ்டார்ட்அப் முக்கியத்துவம் பெற்றது. அவரது தலைமையில், Windsurf விரைவிலேயே AI உள்கட்டமைப்பு துறையில் மிகவும் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.