Asianet News TamilAsianet News Tamil

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிக்கல்.. ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

Enforcement Directorate moves delhi high court against Aravind kejriwal's bail liquour policy case Rya
Author
First Published Jun 21, 2024, 2:45 PM IST | Last Updated Jun 21, 2024, 2:45 PM IST

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

இந்த வழக்கு நீதிபதிகள் சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்தர் துடேஜா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) எஸ்.வி.ராஜு, தனது வழக்கை வாதிடுவதற்கு தனக்கு "முழு வாய்ப்பு" வழங்கப்படவில்லை என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும் "இதை விட விபரீத உத்தரவு இருக்க முடியாது. இரு தரப்பும் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்யாமல், எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. வழக்கை வாதிடவோ அல்லது எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்யவோ போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று அவர் வாதிட்டார்.

ஸ்ரீநகரில் யோகா செய்த பிரதமர் மோடி.. பங்கேற்பாளார்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோஸ் இதோ..

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவு 45ஐ மேற்கோள் காட்டிய அவர், விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவுக்கு தடை விதிக்குமாறும், இந்த வழக்கை நீண்ட நேரம் விசாரிக்க அனுமதிக்குமாறும் ராஜு வலியுறுத்தினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி ஆஜரானார். "இந்த சமர்ப்பிப்புகள் அனைத்தும் சரியல்ல. அவர்கள் நீண்ட நேரம் வாதிட்டனர். ஏழு மணிநேர வாதங்கள் போதவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் " டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் வரை விசாரணை நீதிமன்றத்தில் (Rouse Avenue) எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாது.” என்று தெரிவித்தனர். எனவே இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் வரை டெல்லி முதல்வர் இப்போது சிறையில் இருப்பார். இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

முன்னதாக டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனிடையே மக்களவை தேர்தலில் பிரச்சாரத்தில் மே மாதம்,  அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஜூன் 2ம் தேதி சரணடைந்தார்.

மக்களவை தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தா நியமனம்; குடியரசுத் தலைவர் அறிவிப்பு; யார் இவர்?

இந்த நிலையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீதித்துறையை கேலிக்கூத்தாக்குவதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பதிவில் "மோடி அரசின் அராஜகத்தை பாருங்கள். இன்னும் விசாரணை நீதிமன்ற உத்தரவு வரவில்லை, உத்தரவு நகல் கூட கிடைக்கவில்லை. பிறகு எந்த உத்தரவை மோடியின் அமலாக்கத்துறை  உயர்நீதிமன்றத்தில் சவால் செய்யப் போயிருக்கிறது? ஏன் நீதித்துறை அமைப்பை கேலி செய்கிறீர்கள் மோடிஜி?" என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios