Asianet News TamilAsianet News Tamil

மக்களவை தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தா நியமனம்; குடியரசுத் தலைவர் அறிவிப்பு; யார் இவர்?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மக்களவை உறுப்பினரான பர்த்ருஹரி மஹ்தாபை, அரசியலமைப்பின் 95(1) பிரிவின் கீழ் தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளார்.

President Droupadi Murmu appoints Bhartruhari Mahtab as Lok Sabha Protem Speaker
Author
First Published Jun 20, 2024, 8:24 PM IST | Last Updated Jun 20, 2024, 9:35 PM IST

மக்களவையின் 18வது அவைக்கு தற்காலிக சபாநாயகராக மக்களவை உறுப்பினரான பர்த்ருஹரி மஹ்தாபை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தேர்வு செய்துள்ளார்.

சமூக ஊடக தளமான எக்ஸில், மக்களவை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “அரசியலமைப்புச் சட்டத்தின் 95(1) பிரிவின் கீழ் மக்களவை உறுப்பினர் ஸ்ரீ பர்த்ருஹரி மஹ்தப்பை  தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேர்வு செய்து இருக்கிறார். சபாநாயகர் தேர்வு செய்யும் வரை இவர் சபாநாயகராக செயல்படுவார்'' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், ''18வது மக்களவைக்கு புதிதாக சபாநாயகர் தேர்வு செய்யும் வரை, உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் மற்றும் உறுதிமொழியில் தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்காக, அரசியலமைப்பின் 99வது பிரிவின் கீழ் மக்களவை உறுப்பினர்களான ஸ்ரீ சுரேஷ் கொடிக்குன்னில், ஸ்ரீ தளிக்கோட்டை ராஜுதேவர் பாலு, ஸ்ரீ ராதா மோகன் சிங், ஸ்ரீ ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் ஸ்ரீ சுதிப் பந்தோபாத்யாயா ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமித்து இருக்கிறார்'' என்றும் பதிவிட்டுள்ளார்.

மக்களவை வரும் ஜூன் 24 ஆம் தேதி கூடுகிறது. மக்களவை கூடிய பின்னர் அனைத்து புதிய எம்பிக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும். பின்னர், முறைப்படி ஜூன் 26ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். ஜூன் 24 ஆம் தேதி கூடும் மக்களவை ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறும். ஜனாதிபதி திரௌபதி முர்மு மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத் தொடரில் ஜூன் 27ஆம் தேதி உரையாற்றுவார். 

கடந்த 17வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இருந்தார். பிரதமர் மோடி சபாநாயகர் தேர்வுக்கான மசோதாவை கொண்டு வந்த பின்னர், 2019 -ல் ஜூன் மாதம் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். 

பர்த்ருஹரி மஹ்தப் யார் இவர்?

பர்த்ருஹரி மஹ்தப் 1957-ல் செப்டம்பர் 8 ஆம் தேதி பிறந்தார். முன்னாள் முதல்வர் மறைந்த டாக்டர் ஹரேகிருஷ்ண மஹ்தப்பின் மகன் ஆவார். துவக்கத்தில் பிஜூ ஜனதா தளத்தில் இருந்த பர்த்ருஹரி மஹ்தப் 2024 மார்ச் 28 ஆம் தேதி பாஜகவில் சேர்ந்தார். ஒடிசாவின் கட்டாக் தொகுதியில் இருந்து 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். சிறந்த மக்களவை உறுப்பினருக்கான விருதை 2017ல் பெற்று இருந்தார். மேலும் 2017-20124 வரை மக்களவையில் சிறப்பாக விவாதம் மேற்கொண்டதற்காக சன்சத் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான், 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் சேர்ந்தார் பர்த்ருஹரி மஹ்தப். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios