நாட்டின் மிகப்பெரிய தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளின் 2015-16ம் ஆண்டு வருமானத்தில் 77 சதவீதம் அதாவது ரூ.646 கோடிக்கு முறையான கணக்கு இல்லை, அடையாளம் தெரியாத வழிகளில் இருந்து பணம் வந்துள்ளது எனத் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானாக கொடுக்கும் நன்கொடைகள், மாநாடு டிக்கெட் விற்பனை ஆகியவை மூலமே இரு கட்சிகளுக்கும் பெரும் பகுதியான வருவாய் வந்துள்ளது.

இரு கட்சிகளின் 2016ம் ஆண்டு ஒட்டுமொத்த வருவாய் ரூ.832.42 கோடியாகும் என்று தேர்தல் சீர்திருத்த அமைப்பு(ஏ.டி.ஆர்.) தெரிவித்துள்ளது. இரு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த கணக்கில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சீர்திருத்தத்துக்காக ஏ.டி.ஆர். அமைப்பு போராடி வருகிறது. அந்த அமைப்புவௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது -

கடந்த 2015-16ம் ஆண்டில் பா.ஜனதா கட்சியின் வருவாய் ரூ.570.86 கோடி, காங்கிரஸ் கட்சியின் வருவாய் ரூ.216.56 கோடியாகும். இதில் பா.ஜனதா கட்சியின் வருவாயில், 460.78 கோடிக்கு முறையான கணக்கு இல்லை. அதாவது, யாரிடம் இருந்து பணம் வந்தது, யார் நன்கொடை கொடுத்தார்கள் என்பது குறித்த தகவல் இல்லை. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் வருவாயில், ரூ.186.04 கோடிக்கு முறையான கணக்கு இல்லை.

இதில் ரூ. 20 ஆயிரத்துக்கு குறைவாக நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்களை, அடையாளம் தெரியாத வழிகளில் வந்த பணம் என்று சேர்க்கலாம்.  ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக நன்கொடை கொடுத்தவர்கள் பெயர்களை மட்டுமே தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கலாம், அதற்கு குறைவான தொகை வழங்கியவர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டியது இல்லை.

இதில் இரு கட்சிகளுக்கும் வருவாய் என்பது கூப்பன் விற்பனை, நிவாரண நிதி, இதர வருமானம், நன்கொடை, கூட்டங்களுக்கு நன்கொடை ஆகிய வழிகளில் வருவாய் வந்துள்ளது.

இதில் பா.ஜனதா கட்சி ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக நன்கொடை பெற்ற வகையில் ரூ.536.41 கோடி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.167.96 கோடி பெற்றுள்ளது.

கடந்த 2015-16ம் ஆண்டில் 7 தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருவாய், ரூ. 1,033.18 கோடியாகும். இதில்  ரூ.754.45 கோடியை கட்சிகள் செலவு செய்துள்ளன. ரூ.278.73 கோடியை செலவு செய்யவில்லை

இதில் பா.ஜனதா கட்சிக்கு அதிகபட்சமாக ரூ.570.86 கோடியும், 2-வதாக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.261. 56 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.107.48 கோடியும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.47.39 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.34.58 கோடியும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.9.14 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.2.18 கோடியும் வருவாய் வந்துள்ளது. 

இதில் பா.ஜனதா கட்சியின் ஓட்டு மொத்த வருவாயில் 23 சதவீதமும், காங்கிரஸ் கட்சியின் வருவாயில் 26 சதவீத வருவாயும் செலவு செய்யப்படவில்லை. 

கடந்த 2014-15ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், பா.ஜனதா கட்சியின் வருவாய் 41சதவீதம் குறைந்துள்ளது. அப்போது, பா.ஜனதா கட்சிக்கு ரூ.970.43 கோடி வருவாய் கிடைத்தது. 2015-16ல் ரூ.570.86 கோடி வருவாய் மட்டுமே கிடைத்தது. 
காங்கிரஸ் கட்சியின் வருவாய் கடந்த 2014-15ம் ஆண்டில் ரூ.593.31 கோடியாக இருந்த நிலையில், 2015-16ம் ஆண்டு 56 சதவீதம் குறைந்து ரூ.261.56கோடியாக சரிந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.