இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. ந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 22 லட்சத்து 91 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  1 லட்சத்து 78 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாலில் 2 ஆயிரத்து 104 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 84 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது.

இப்படி நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் பாரத பிரதமர் மோடி நாளை 3 முக்கிய ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளார். முதலாவதாக நாளை காலை 9 மணி அளவில் கொரோனா பாதிப்புக்களை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

அதன் பின்னர் நாளை காலை 10 மணிக்கு கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, சத்தீஷ்கர், பீகார், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 

இந்த இரண்டு கூட்டங்களும் நிறைவடைந்த பிறகு பல்வேறு மாநிலங்களில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக பகல் 12.30 மணி அளவில் முன்னணி ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சரி செய்வது குறித்தே 3 கூட்டங்களையும் பிரதமர் மோடி நாளை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.