இந்தியாவிலேயே அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலமும் கொரோனா 2வது அலையில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கொரோனா நோய்த்தொற்றின் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. அதன் காரணமாக, பல மாநிலங்களில் மக்கள் கூட்டம் மருத்துவமனைகளில் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது. கொரோனா முதலாம் அலையைக்காட்டிலும், இரண்டாவது அலையில் பெரும்பாலான நோயாளிகளுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், உயிர்காக்கும் ஆக்ஸிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

இந்தியாவிலேயே அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலமும் கொரோனா 2வது அலையில் சிக்கித் தத்தளித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது உத்தரப்பிரதேசம். நாளோன்றுக்கு சராசரியாக 30 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இம்மாநிலத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 29 ஆயிரத்து 824 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 266 பேர் உயிரிழந்துள்ளனர். லக்னோ, காசியாபாத், வாரணாசி, நொய்டா ஆகிய பாகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை 5 நாட்களுக்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.