புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதைத்தொடர்ந்து இந்தியா–பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உத்திகள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் நேற்று நாடாளுமன்ற நூலகத்தில் கூடி ஆலோசனை நடத்தின. அதில் புலவாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

பின்னர் அவை கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் நாட்டில் தற்போது நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக தங்கள் கவலையை எதிர்க்கட்சிகள் பகிர்ந்து இருந்தன.

பாதுகாப்பு படையினரின் தியாகத்தை ஆளுங்கட்சி அப்பட்டமாக அரசியலாக்குவது கவலையளிக்கிறது. மலிவான அரசியல் பலன்களை கடந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 

நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அரசை வலியுறுத்துகிறோம்’ என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் வழக்கமான நடைமுறைப்படி பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தாதது துரதிர்ஷ்டவசமானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. 

எனினும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டறிக்கையில் குறிப்பிட்டு இருந்தன.

முன்னதாக புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்–இ–முகமது இயக்கம் நடத்திய தாக்குதலுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினர். மேலும் பாதுகாப்பு படையினருக்கு தங்கள் ஆதரவையும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சீதாராம் யெச்சூரி, சரத் பவார், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ஜித்தன் ராம் மஞ்சி மற்றும் பல்வேறு முக்கியமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். எனினும் சமாஜ்வாடி கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.