அதுக்குள்ள சந்தோஷ படாதீங்க... ஆபத்து இன்னும் இருக்கு: டெல்லி மக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை
தலைநகர் டெல்லியில் யமுனை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் மூடப்பட்ட மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு அருகில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என்றும், வெள்ள அபாயம் இன்னும் முடிவுக்கு வராததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை எச்சரித்துள்ளார்.
“வெள்ளம் சூழந்த பகுதிகளில் சிலர் நீரில் இறங்கி விளையாடவும், குளிக்கவும் செய்கிறார்கள் என்றும் செல்ஃபி எடுப்பது, வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் செல்வதாக செய்திகள் வருகின்றன. தயவு செய்து இதைச் செய்யாதீர்கள். அதனால் உயிரிழப்பு நேரிடக்கூடும். வெள்ள அபாயம் இன்னும் தீரவில்லை. தண்ணீர் ஓட்டம் மிகவும் அதிகமாகவே உள்ளது. மேலும் நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம்" என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆற்றில் நீர் மட்டம் குறைந்து வருகிறது, அதிகமான மழைப்பொழிவும் இல்லை. ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் ஏற்பட்டுள்ள அவசரச் சூழலுக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதையும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
"ஒவ்வொரு மனிதரும் மற்ற மனிதர்களுக்கு உதவவேண்டிய நெருக்கடியான சூழல் இது. ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. பாஜக நேற்று முதல் என்னைப் பற்றித் தவறாகப் பேசிவருகிறது. அவர்கள் அதைச் செய்யட்டும், எனக்கு அது முக்கியமில்லை" என்று அவர் கூறினார்.
அமீரகம் சென்ற பிரதமர் மோடி! அதிபர் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை
யமுனை ஆற்றில் அபாயக் கட்டத்தை (205.33 மீட்டர்) தாண்டி 208 மீட்டருக்கு மேல் சென்ற நீர்மட்டம், சனிக்கிழமை காலை 10 மணியளவில் 207.48 மீட்டராகக் குறைந்தது. இதனால் மூடப்பட்ட ஓக்லா நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. சந்திரவால் மற்றும் வஜிராபாத் ஆகிய இடங்களில் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் வரும் நாட்களில் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என முதல்வர் தெரிவித்தார்.
யமுனையில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், மீண்டும் கனமழை பெய்யவில்லை என்றால், நிலைமை விரைவில் இயல்பு நிலைக்கு வரும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். ஐடிஓ தடுப்பணையில் உள்ள வண்டல் மண் அடைப்பை அகற்றி, தடுப்பணையை முழு கொள்ளளவிற்குக்க கொண்டுவரும் பணியில் இந்திய கடற்படை வீரர்களும் டெல்லி நிர்வாகத்திற்கு உதவி வருகின்றனர்.