கோ மூத்திர மாநிலங்களில் தான் பாஜக ஜெயிச்சுருக்கு! திமுக எம்.பி. செந்தில் குமார் சர்ச்சை பேச்சு
மக்களவையில் பேசிய திமுக எம்.பி. செந்தில் குமார், கோ மூத்திர மாநிலங்களில் தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்று கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கறது.
மக்களவையில் தி.மு.க., எம்.பி., செந்தில் குமார் இந்தி பேசும் மாநிலங்களை 'கோ மூத்திர மாநிலங்கள்' என்று குறிப்பிட்டுப் பேசியது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. பாஜக கோ மூத்திர மாநிலங்களில் மட்டும் தான் வெற்றி பெறும் என்று அவர் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டைப் புறக்கணித்து, தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
சந்திரயான்-3 உந்தவிசைக் கலனை பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டுவந்த இஸ்ரோ!
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மக்களவையில் பேசிய திமுக எம்.பி. செந்தில்குமார், "இந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் பொதுவாக கோ மூத்திர மாநிலங்கள் என்று அழைப்போது. அங்கு நடக்கும் தேர்தல்களில் மட்டுமே இந்த பாஜகவுக்கு வெற்றி கிடைக்கிறது" என்று கூறியுள்ளார்.
தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் பாஜக அடைந்த தோல்விகளையும் சுட்டிக்காட்டி திமுக எம்.பி. செந்தில் குமார் பேசியிருக்கிறார்.
தர்ம்புரி மக்களவைத் தொகுதி எம்.பி.யான செந்தில் குமார் இந்தி பேசும் மாநிலங்களை 'கோ மூத்திர மாநிலங்கள்' என்று குறிப்பிடுவது முதல் முறையல்ல. 2022ஆம் ஆண்டு, தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசியபோதும் இதே போல விமர்சித்துப் பேசினார் என்பது நினைவூட்டத்தக்கது.