26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி சஜித் மிர் கவலைக்கிடம்! பாக். சிறையில் விஷம் வைத்துக் கொல்ல முயற்சி!
சஜித் மிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றிய அறிக்கைகள் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றின் தந்திரமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்களின் மரணங்கள் மர்மமாக இருக்கும் நிலையில், 26/11 தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான பயங்கரவாதி சஜித் மிர்ரை பாகிஸ்தான் சிறையில் வைத்து விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறியதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து, சஜித் மிர் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மிர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
சிறைக்குள் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்ட பின்னர் வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் காரணமாகக் காட்டி, சஜித் மிர் வேறு சிறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றிய அறிக்கைகள் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றின் தந்திரமாக இருக்கலாம் என்றும், லஷ்கர் பயங்கரவாதிக்கு எதிராக சர்வதேச நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கையை மட்டுப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சஜித் மிர் ஐ.நா. சபையால் தேடப்படும் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரது தலைக்கு 5 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. இச்சூழலில் அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதைத் தடுக்க ஐ.எஸ்.ஐ மேற்கொண்ட முயற்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, மும்பையில் நடந்த கொடிய 26/11 பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றத்துக்காக சஜித் மிர்க்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.4,20,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
26/11 மும்பை தாக்குதலில் சஜித் மிரின் பங்கு
சுமார் 40 வயது மதிக்கத்தக்க சஜித் மிர் 2008 இல் மும்பையில் நடந்த 26/11 கொடிய தாக்குதலின் முக்கிய சதிகாரர்களில் ஒருவர். இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கிய வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
மும்பை தாக்குதலில் அவரது குற்றத்தின் தன்மை காரணமாக, அமெரிக்கா அவரது தலைக்கு 5 மில்லியன் டாலர் வெகுமதி அறிவித்தது. அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து முன்வைத்த கோரிக்கையை ஏற்று மீர் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். அவரது சொத்துக்களை முடக்கி, பயணத் தடையும் விதிக்கப்பட்டது.