கடந்த 2019ம் ஆண்டே பாஜக.வில் இணையுமாறு எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், காங்கிரஸ் மீதான விஸ்வாசம் காரணமாக சிறைக்கு சென்றதாக கர்நாடகா துணைமுதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே அவ்வபோது புகைச்சல் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் விஸ்வாசத்தின் சின்னம் டிகே சிவக்குமார் என்ற புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவில் துணைமுதல்வர் சிவக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “அரசியலில் எதுவும் நிரந்தரம் கிடையாது. கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் 17 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அப்போது கனகபுராவில் இருந்த நான் பெங்களூரு சென்று சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை அழைத்துப் பேசினேன்.

இந்த சந்திப்பின் போது எனது சகோதரர் சுரேஷ்ம் உடன் இருந்தார். அப்போது டெல்லி வருமான வரி அலுவலக டிஜியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் போது பாஜக தலைவர் ஒருவர் என்னுடன் பேசினார். பாஜக.வுக்கு ஆதரவளித்து துணைமுதல்வராகிறீர்களா? அல்லது சிறைக்கு செல்கிறீர்களா? என்று கேட்டார். கட்சியின் மீது நான் கொண்ட விஸ்வாகம் காரணமாக சிறை செல்ல முடிவெடுத்தேன். அந்த பாஜக தலைவரின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.