ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து விமான நிறுவனங்களுக்கு DGCA முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
DGCA Issues important Order To Boeing Flights: அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 260 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு முற்றிலுமாக எரிந்து கரிக்கட்டையான நிலையில் இந்த விபத்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏர் இந்தியா விமான விபத்து
மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில் விமானத்தின் இரண்டு என்ஜின்களுக்கும் செல்லும் எரிபொருள் விநியோகம் 'கட்-ஆஃப்' செய்யப்பட்டதாக தெரியவந்தது. விமான கேபினில் இருந்த குரல் பதிவுகளில், ஒரு விமானி மற்றொரு விமானியிடம் "எரிபொருளை ஏன் நிறுத்தினீர்கள்?" என்று கேட்டதாகவும், அதற்கு மற்றொரு விமானி 'நான் நிறுத்தவில்லை' என கூறியதாகவும் விசாரணை அறிக்கை கூறியது.
விபத்து நடந்தது எப்படி?
மேலும் இது தெரிந்தவுடன் விமானி ''மே டே, மே டே'' என்று அவசரமாக கூறி விமான கட்டுப்பாட்டுக்கு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் சில வினாடிகளில் அங்கு இருந்து பதில் வருவதற்குள் விமானம் விபத்துக்குள்ளானதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளின் பூட்டும் அமைப்பை (fuel switch locking mechanism) ஜூலை 21ம் தேதிகக்குள் ஆய்வு செய்யும்படி போயிங் விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்களுக்கு இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு
இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இந்த உத்தரவு போயிங் 717, 737, 747, 757, 767, 787 மற்றும் MD-11, MD-90 உள்ளிட்ட பல போயிங் மற்றும் மெக்டொனால்ட் டக்ளஸ் விமான மாடல்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டிலேயே அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) சில விமான மாதிரிகளில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் பூட்டும் அம்சம் தளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை விடுத்து இருந்தது.
ஜூலை 21ம் தேதிக்குள் அறிக்கை
தற்போது பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே இந்த ஆய்வுகளைத் தொடங்கியுள்ளதாவும் ஆகவே இந்த ஆய்வுகளை முடித்து அது தொடர்பான அறிக்கைகளை ஜூலை 21ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
