இந்தியாவில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ம் தேதியிலிருந்து மே 31ம் தேதிவரை பொதுமுடக்கம் அமலில் இருந்தது. ஜூன் மாதம் முதல் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்படுகின்றன. 

3ம் கட்ட தளர்வு குறித்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. எவற்றிற்கெல்லாம் அனுமதி, எவற்றிற்கெல்லாம் தடை நீடிக்கும் என்ற முழு விவரம் இதோ..

* ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்களை திறக்கலாம். ஆனால், அரசு அளிக்கும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

* மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் தனிநபர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் பயணிப்பதற்கு இ பாஸ் வாங்க வேண்டிய அவசியமில்லை. இ பாஸ் இல்லாமலேயே நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இதுகுறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்.

* பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை ஆகஸ்ட் 31 வரை தொடரும். 

* இரவு நேரங்களில் மக்கள் நடமாடுவதற்கான தடை நீக்கப்படுகிறது. 

* முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடலாம்.

* வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி. 

* தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவற்றை திறப்பதற்கான தடை நீடிக்கிறது.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் தொடரும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளை அறிவிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு தொடர்ந்து அனுமதியளிக்கப்படுகிறது.

*  கொரோனா பாதிப்பு  குறைவாக உள்ள பகுதிகளிலும் மாநில அரசுகள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சில கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம். 

* சிறப்பு ரயில்கள், உள்நாட்டு விமான போக்குவரத்து ஆகியவற்றிற்கு மத்திய அரசு அளித்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

* கொரோனா பாதிப்பு குறித்து அறிய ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.