சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு தங்கு தடையின்றி ஏ.டி.எம்.களில் பணம் கிடைக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். அது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை சீசன்
கார்த்திகை முதல் தை மாதம் வரை அதாவது அடுத்த 3 மாதங்களுக்கு தென் மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வார்கள். கார்த்திகை மாதம் நேற்று பிறந்ததையடுத்து, சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு ரூ.1000, ரூ.500 நோட்டை செல்லாது என அறிவித்த நிலையில், நாடுமுழுவதும் சில்லறை நோட்டுகளுக்கும், அன்றாடச் செலவுக்கும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஏற்பாடு
இந்நிலையில், மலையில் அமைந்துள்ள சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பணம் இல்லாமல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அனைத்து ஏ.டி.எம்களில் பணம் நிரப்ப தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது கேரள அரசு.
கடிதம்
இது குறித்து கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ மத்திய அரசின் செல்லாத ரூபாய் குறித்த அறிவிப்பால், பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து ஆலோசித்தோம். மலைக்கு வரும் பக்தர்களுக்கு சிரமும் இன்றி பணம் எளிதாக ஏ.டி.எம்.களில் கிடைக்க வகை செய்ய மத்திய அரசிடம் உதவி கோரப்பட்டுள்ளது. அது தொடர்பாக பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம்.
பம்பை, சந்நிதானத்தில் ஏராளமான ஏ.டி.எம்.கள் உள்ளன. ஆனால், பக்தர்கள் லட்சக்கணக்கில் வரும்போது அந்த ஏ.டி.எம்.களில் பணம் விரைவாக தீர்ந்துவிடும். அந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து, சபரிமலையில் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வகை செய்ய வேண்டும்'' என்றார்.
பிளாஸ்டிக் இல்லை
மண்டல மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் குறித்து அவர் கூறுகையில், “ சபரிமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதியில் பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி அதை மாற்றி அமைக்க இருக்கிறோம்.

பம்பை முதல் சந்நிதானம் வரை பக்தர்களுக்கு குடிநீர் கிடைக்க 132 இடங்களில் டேங்குகள் அமைத்துள்ளோம். இதற்காக 11 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டாலும் மீட்புப்பணிக்காக நவீன இயந்திரங்களும் கைவசம் உள்ளன. மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் 24 மணிநேரமும் பணியில் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
