Asianet News TamilAsianet News Tamil

"சீக்கிரம்... வங்கி, ஏ.டி.எம்.களில் பணம் எடுத்து வச்சுக்குங்க.." அடுத்த 3 நாளைக்கு தொடர் விடுமுறை

demonetisation currency-FEUL3T
Author
First Published Dec 8, 2016, 3:18 PM IST


வங்கிகளுக்கு சனிக்கிழமை முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், மக்கள் பணம் எடுக்க, ஏ.டி.எம்., வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு கடந்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி அறிவித்தது. இதையடுத்து  வங்கிகளில் சென்று பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும், புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கும் மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் புகுத்தி வருவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 

மேலும், வங்கிகளுக்கு போதுமான அளவு பணம் சப்ளை செய்யப்படாததால், பெரும் பணப்பற்றாக்குறை நிலவுகிறது. பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பணம் இன்றி பூட்டப்பட்டு கிடக்கின்றன. புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டை மாற்றமுடியாமலும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.  

வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தில் வாரத்துக்கு ரூ.24 ஆயிரமும், நாள் ஒன்றுக்கு  ரூ.2,500 மட்டுமே எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு இருப்பதால்,மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.கள் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் பணப் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில்,  வங்கிகளுக்கு 2-வது சனிக்கிழமை விடுமுறையாகவும், , ஞாயிறு வழக்கமான விடுமுறையும் வருகிறது. அதையடுத்து 12-ந் தேதி திங்கட்கிழமை மிலாடி நபிக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் மூடப்படுவதால் மக்களின் பணத் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று இருந்தே வங்கிகளில் கூட்டம் அலை மோதுகிறது. வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios