நாட்டில் மின்னணு முறையில் பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த, மக்களுக்கு வாரந்தோரும் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை குலுக்கல் பரிசு அளிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவி்க்கின்றன.
வாரத்துக்கு யார் அதிகமாக டிஜிட்டல் பேமெண்ட் அதாவது மின்னணு பரிமாற்றத்தில் ஈடுபடுகிறார்களோ, அதாவது, காய்கறி வாங்குவது முதல் ஓட்டலில் சாப்பிடுவது வரை, ரெயில் டிக்கெட் வாங்குவது முதல் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது என அனைத்தையும் டெடிபிட், கிரெடிட், இ-வாலட்டுக்கள் மூலம் அதிகமாக பரிமாற்றம் செய்யும் மக்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் பரிசுக்காக ரூ.125 கோடி ஒதுக்கப்பட இருக்கிறது.

இது குறித்து தேசிய பேமெண்ட் கார்பரேஷன் ஆப் இந்தியாவிடம் குலுக்கல் பரிசுத்திட்டம் குறித்து அறிக்கை அளிக்க நிதி அயோக் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டு மக்கள் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி இழுத்துச் செல்வதுதான் இதன் நோக்கமாகும்.
இது குறித்து நிதிஅயோக் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், நாட்டில் மின்னணு பரிமாற்றத்தின் அளவு 300 மடங்கு அதிகரித்துள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் இந்த மின்னணு பரிமாற்றத்தின் சேவை கிடைக்க உறுதி செய்ய வேண்டும். இதற்காக சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் மின்னணு பரிமாற்றைத்தை நோக்கி இழுத்துச் செல்ல வேண்டும். அதற்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் பல சிறப்பு திட்டங்களையும் , பரிசுகளையும் அறிவிக்க வேண்டும். இந்த திட்டத்தின்படி, மின்னணு பரிமாற்றத்தை மேற்கொள்ளும் அனைத்து நுகர்வோர்களும், வர்த்தகர்களும் பரிசுகள் பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.
இந்த பரிசுத்திட்டத்தில் 2 விதமான முறைகள் உள்ளன. முதலாவதாக, வாரந்தோறும் அதிகமாக மின்னணு பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ள நுகர்வோர்களை தேர்வு செய்து, அவர்களுக்குள் குலுக்கல் முறையில் பரிசுகள் அளிப்பது, இரண்டாவது ஒவ்வொரு காலாண்டும், அதாவது 3 மாதங்களுக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்வு செய்து நுகர்வோர்களுக்கு மிகப்பெரிய பரிசுகள் அளிப்பது. இந்த பரிசுகளுக்காக வரும் பட்ஜெட்டில் ரூ.125 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

ஏழைமக்கள், நடுத்தர குடும்பத்தினர்கள், சிறு வர்த்தகர்கள்,வணிகர்கள், ஆகியோருக்க ஏற்றார் போல் திட்டங்கள் உருவாக்கப்படும். இந்த திட்டத்தின்படி, ரூபே கார்டுகள், கிரெடிட், டெபிட்கார்டுகள், இ-வாலட், மொபைல் பேங்கிங், பி.ஓ.எஸ். மெஷின், உள்ளிட்ட அனைத்துவகையான மின்னணு பரிமாற்றங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்து வரும் நாட்களில் விரைவில் வெளியிடப்படும். நவம்பர் 8-ந்தேதிக்கு பின், டிஜிட்டல் பரிமாற்ற முறையில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் இந்த போட்டியில் பங்கு பெறலாம்.
இந்த திட்டத்தில் மாநிலங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். மாவட்டங்கள், நகர, மற்றும் ஊரகப்பகுதிகளில் மின்னணு பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
