பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா, தற்போது ஜம்மு காஷ்மீரின் செனாப் நதியில் புதிய நீர்மின் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் இந்த 'வாட்டர் ஸ்டிரைக்' நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் குறுக்கே அணை கட்டும் பணிகளை இந்தியா அதிகாரப்பூர்வமாக முடுக்கிவிட்டுள்ளது.
மத்திய மின்சக்தி துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், கிஷ்த்வார் பகுதிக்கு நேரில் சென்று துல்ஹஸ்தி 2 (260 MW) நீர்மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதோடு, ஏற்கனவே கட்டுமானத்தில் இருக்கும் ராட்லே (850 MW) மின் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்குப் பேரிடி
நீண்ட காலமாக இந்த ஒப்பந்தத்தைக் காட்டி இந்தியா நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்துவதை பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்து வந்தது. இதுகுறித்து நீர் மேலாண்மை நிபுணர் சந்தீப் தப்பா கூறுகையில்:
"இது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்தியுள்ள ஒரு 'வாட்டர் ஸ்டிரைக்' (Water Strike). பாகிஸ்தானின் தேவையற்ற குறுக்கீடுகளால் நமது திட்டங்கள் இவ்வளவு காலம் தாமதமாகி வந்தன. இனி பாகிஸ்தானின் தலையீடு இன்றி நாம் பணிகளை விரைந்து முடிக்க முடியும்," என்றார்.
பாகிஸ்தான் தரப்பு அலறல்
இந்தியாவின் இந்த அதிரடி முடிவால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி கூறுகையில், "இந்தியா தண்ணீர் விவகாரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது (Weaponisation of water). இந்தத் திட்டம் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை," எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒப்பந்தம் நிறுத்தம் ஏன்?
"தண்ணீரும் ரத்தமும் ஒரே நேரத்தில் ஓட முடியாது" என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டின்படி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அணை தொடர்பான தரவுகளைப் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை.
இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் மின்சாரத் துறை கடும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


