Asianet News TamilAsianet News Tamil

டெல்லி குடியரசு தின விழாவின் மலைக்க வைக்கும் 11 சுவாரசியங்கள்.. தெரிந்துகொள்ள வேண்டிய பொக்கிஷங்கள்..!

குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில்  இந்திய இராணுவத்தின் "25- பாண்டியர்ஸ்" என்றழைக்கப்படும் 7 பீரங்கிகளும் இடம்பெறும்.  இந்த பீரங்கிகள் 1941 இல் தயாரிக்கப்பட்டவை.

Delhi Republic Day Celebration 11 Highlights
Author
Delhi, First Published Jan 26, 2022, 10:02 AM IST

இந்திய குடியரசுத் தினத்தின் ஹைலைட்டே, டெல்லியில் நடைபெறும் விழாதான். இந்தக் கொண்டாட்டத்தின் சுவாரசியமான 11 தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

1. ஒவ்வோர் ஆண்டும், ஜனவரி 26 அன்று குடியரசுத் தின அணிவகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறுகிறது. ஆனால், 1950 முதல் 1954 வரை ராஜ்பாத்தில் குடியரசுத் தின அணிவகுப்பு நடைபெறவில்லை. அப்போது டெல்லி இர்வின் ஸ்டேடியம் (இப்போது நேஷனல் ஸ்டேடியம்), கிங்ஸ்வே, செங்கோட்டை மற்றும் ராம்லீலா மைதானத்தில்தான் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 1955 ஜனவரி 26 முதல்தான் ராஜ்பாத் நிரந்தரமானது. அந்த நேரத்தில் ராஜ்பாத் என்பது 'கிங்ஸ்வே' என்ற பெயரில் அறியப்பட்டது.


2. ஒவ்வோர் ஆண்டும் குடியரசுத் தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்பார்கள். 1950-இல் இந்தோனேசிய அதிபர் டாக்டர் சுகர்னோ முதல் விருந்தினராக அழைக்கப்பட்டார்.  1955-இல் ராஜ்பாத்தில் முதல் அணிவகுப்பு நடைபெற்ற போது, ​​பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் முகமது அழைக்கப்பட்டார். 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக சிறப்பு விருந்தினர்கள் இடம் பெறவில்லை.

3. குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில்  இந்திய இராணுவத்தின் "25- பாண்டியர்ஸ்" என்றழைக்கப்படும் 7 பீரங்கிகளும் இடம்பெறும்.  இந்த பீரங்கிகள் 1941 இல் தயாரிக்கப்பட்டவை. 

4. குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்பாளர்கள் அனைவரும் அதிகாலை 2 மணிக்கு தயாராகி, அதிகாலை 3 மணிக்கு ராஜ்பாத்தை வந்தடைவார்கள். இந்த  அணிவகுப்புக்கான ஏற்பாடுகள் ஜூலையிலேயே தொடங்கிவிடும். குடியரசுத் தின விழாவில் பங்கேற்போர் சுமார் 600 மணிநேரம் பயிற்சி செய்வார்கள். 

 5. ஜனவரி 26 ஆம் தேதி அணிவகுப்பு ஒத்திகைக்காக, ஒவ்வொரு குழுவும் 12 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும். ஆனால், ஜனவரி 26 அன்று அவர்கள் 9 கிலோமீட்டர் தூரத்தை மட்டுமே கடப்பார்கள். 

6. டெல்லி குடியரசுத் தின அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்கும் ஒவ்வொரு ராணுவ வீரர்களும் 4 நிலை விசாரணைகளை கடக்க வேண்டும். தவிர, அவர்களின் ஆயுதங்கள் தோட்டாக்களால் ஏற்றப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் முழுமையாக சோதிக்கப்படுவார்கள். 

7. அணிவகுப்பில் ஈடுபடும் அலங்கார ஊர்திகள் மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகரும், இதனால் முக்கிய நபர்கள் அவற்றை முழுமையாகப் பார்க்க முடியும். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஒன்பது அமைச்சகங்கள் மற்றும் துறைகள் அவற்றின் ஊர்திகளைக் காட்சிப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் அருணாச்சல பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, மேகாலயா, பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை அடங்கும்.


8. குடியரசுத் தினக் கொண்டாட்டட்தின் முக்கிய நிகழ்வு, "ஃப்ளைபாஸ்ட்" ஆகும். இந்திய விமானப் படை நடத்தும் சாகசங்கள். இதன் பொறுப்பு முழுவதும் மேற்கு விமானப்படை கட்டளையிடம் இருக்கும்.  இதில் சுமார் 41 விமானங்கள் பங்கேற்கும்.  அணிவகுப்பில் ஈடுபடும் விமானங்கள் விமானப்படையின் பல்வேறு மையங்களில் இருந்து புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் ராஜபாதையை அடையும்.

9. மகாத்மா காந்தியின் விருப்ப பாடலான ‘என்னுடன் இருங்கள்..’ என்ற பாடல் அணிவகுப்பு நிகழ்வில் ஒலிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அதை மத்திய அரசு நீக்கியுள்ளது.

10. ராணுவ வீரர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INSAS துப்பாக்கிகளுடன் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். சிறப்பு பாதுகாப்புப் படை வீரர்கள் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட தவோர் துப்பாக்கிகளுடன் அணிவகுத்துச் செல்கின்றனர். 

11. ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, 2014 குடியரசுத் தின அணிவகுப்பு  நிகழ்வுக்கு சுமார் 320 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2001-இல் இந்த செலவு சுமார் 145 கோடி ரூபாயாக இருந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios